02 October 2023

ஜனநாயகத்தின் தாய் நாடா இந்தியா?

தில்லியில் கடந்த செப். 9ஆம் தேதி நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முதல் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, ‘ஜனநாயகத்தின் தாய்நாடாக இந்தியா விளங்குவதால், பன்னெடுங்காலமாக பேச்சுவார்த்தை மற்றும் ஜனநாயக விழுமியங்களில் எங்களது நம்பிக்கை மாறாமல் உள்ளது. உலகம் ஒரு குடும்பம் என்று பொருள் கொண்ட வசுதைவ குடும்பகம் என்பதே எங்கள் சர்வதேச பார்வையின் அடித்தளமாக விளங்குகிறது’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஜி20-ன் போது சேரிகளை மறைத்த ஜனநாயகத்தின் தாய்நாடு 

கடந்த ஒரு வார காலமாக வெளிவரும் செய்திகள் பாஜக கும்பல் கட்டமைக்க முயன்ற போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது கனடா தேசம். டெல்லியில் ஜி20 மாநாட்டை முடித்த கையோடு கனடா பாராளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டார்.

கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரத்தில் அமைந்துள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக இருந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்பவர், அந்த சீக்கிய கோவிலின் வாகனம் நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


நிஜ்ஜாரின் படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டிருப்பதாக கனடா நம்புவதாவும், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிவித்தார் ட்ரூடோ. கனடா மண்ணில் கனடிய குடிமகன் ஒருவர் அந்நிய நாட்டின் அரசால் கொல்லப்படுவது என்பது கனடாவின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்று பிரகடனம் செய்தது கனடா பாராளுமன்றம்.

இதனையொட்டி, கனடாவுக்கான இந்திய தூதரகத்திலிருந்து முக்கிய அதிகாரியை வெளியேற்றியது கனடா. இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை, அதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியும், கனடிய குடிமக்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.


யார் இந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்?


ஹர்தீப்சிங் நிஜ்ஜார்
இந்தியவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட நிஜ்ஜார் கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டேன் என்ற வாதத்தை முன்வைத்து அகதி குடியுரிமை கோரிய நிஜ்ஜாரின் மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், இந்தியாவில் சீக்கியர்களின் நிலை, நெருக்கடி இவற்றை தெளிவுபடுத்தி கனடா நாட்டில் அகதியாக குடியேறினார்.

ஆனால், நிஜ்ஜார் குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்குறிப்பில், தொடக்கத்தில் பாபர் கல்சா இண்டர்நேஷ்னல் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டவர், பாகிஸ்தானில் ஆயுத பயிற்சியும் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. பின்னாட்களில், ’காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் இந்திய அரசின் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளன. மேலும், 2020ஆம் ஆண்டு ஹர்தீப்சிங் நிஜ்ஜாரை ’ஊபா’ சட்டத்தின் கீழ் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தது இந்திய அரசு. கடந்த சில ஆண்டுகளாக அயலகத்தில் வாழும் சீக்கியர்கள் மத்தியில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தும் செயல்பாட்டிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

சில கூலிப்படையினரால் கொல்லப்படும் ஆபத்து உள்ளது என்று நிஜ்ஜாருக்கு கனடிய உளவுத்துறை முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே வான்கூவரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு, இந்த கொலையை இந்திய அரசு தான் செய்தது என்று குற்றஞ்சாட்டி சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், பல ஆண்டுகளாக கனடிய சீக்கிய செயற்பாட்டாளர்கள் வெளிபடுத்தி வந்த அச்சம் தற்போது உண்மையாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாசுதைவ குடும்பகம் என்று டெல்லியில் மோடி பாடம் எடுத்துக்கொண்டிருந்த போதே, ஜி20 பின்னணியில் நடைபெற்ற சந்திப்பில் நிஜ்ஜாரின் படுகொலையில் இந்திய அரசின் தொடர்பு குறித்து நேரடியாக மோடியிடம் கேள்வியெழுப்பி உள்ளார் ஜஸ்டின் ட்ரூடே. இதற்கு பல மாதங்கள் முன்பாகவே படுகொலை குறித்து இந்திய அரசுடன் நேரடியாகவே விவாதித்ததாக இப்போது தகவல் வந்துள்ளது.

நிஜ்ஜார் படுகொலை செய்தி அடங்குவதற்குள், கனடாவில் செயல்பட்டு வந்த மற்றொரு காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தூல் சிங் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதல் என்று சொல்லப்பட்டாலும், 2015ஆம் ஆண்டு முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னாய் என்ற பயங்கரவாதியின் குழுவினர் இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் தன்னை தீவிரவாதி என்று அழைக்க வேண்டாம் என்றும், தாம் தாய்நாட்டை நேசிப்பதாகவும், பாரத நாட்டுக்காக வாழ்ந்து இறப்பதே தனது நோக்கம் என்று என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு செய்திருந்தான் லாரன்ஸ் பிஷ்னாய். இவனையும் பாஜக ஆதரவு கும்பல் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறது.



சீக்கியர்களை கண்டு பாஜக அஞ்சுவது ஏன்?


காஷ்மீர் தொடங்கி தமிழ்நாடு வரை பல்வேறு தேசிய இனங்களின் தனித்த மொழி, பண்பாடு, நம்பிக்கை ஆகியவற்றை ஒடுக்கி, பாரதம் என்ற பெயரில் சனாதனத்தின் அடிப்படையிலான நாட்டை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் கும்பல். அதனை செயல்படுத்தி வருவது மோடி தலைமையிலான பாசிச பாஜக கும்பல். இந்த நோக்கத்துக்கு தெற்கே தமிழர்கள் போல, வடக்கே எதிர்த்து நிற்பது சீக்கிய தேசிய இனம் தான்.

வீரஞ்செறிந்த போராட்டத்தின் வழியே வந்த பல்வேறு குருக்களால் கட்டமைக்கப்பட்ட சீக்கிய சமயம் என்பது மனிதகுலத்துக்கு எதிரான சனாதன கோட்பாட்டுக்கு வெளியே உள்ளது. சீக்கியர்கள் எப்போதும் தங்களை இந்துக்கள் அல்லாத தனித்த இனமாகவே கருதி வந்துள்ளனர். மேலும், இன்றளவும் போர்க்குணமுள்ள இனமாக தங்களை பாவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.


இந்தியாவில் காலிஸ்தான் கோரிக்கை இந்திரா காந்தி அரசால் ஒடுக்கப்பட்ட பின்பு, இந்திய ஒன்றிய அரசால் சீக்கிய அரசியல் கைதிகள் இன்றளவும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எல்லை மாநிலத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் சீக்கிய இளைஞர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருட்களின் பயன்பாடு திட்டமிட்டு அதிகரித்துள்ளதாகவும், வீரியமிக்க தங்கள் இளைஞர்களை குறிவைத்து போதை பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக சீக்கிய செய்ற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, சீக்கியர்களின் வலுவான விவசாய பொருளாதாரத்தின் பின்னணியில் அமைந்துள்ள பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை குறிவைத்தே 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு.

தில்லி ஆட்சியாளர்களை பணியவைத்த சீக்கிய படை

வேளாண் சட்டத்தில் ஒரு புள்ளியை கூட மாற்ற முடியாது என்று சவடால் பேசியது பாசிச பாஜக அரசு. ஆனால் தில்லியை ஒரு வருட காலம் முற்றுகையிட்டு, தங்களது தீரமிக்க போராட்டத்தால் சட்டங்களை திரும்பப்பெறச் செய்தனர் விவசாயிகள். இதன் முழு பெருமையும் சீக்கிய விவசாயிகளையே சாரும். போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று அவதூறு பிரச்சாரம் செய்தது பாஜக அரசு. இது இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி என்று கண்ணீர் வடித்தது மோடியின் ஊடக கும்பல். எவராலும் வீழத்த முடியாத சாணக்கியன் என்று சொல்லப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகள் போராட்டத்தின் முன் மண்டியிட்டார்.


வரலாறு முழுக்க தங்கள் மீதான அந்நிய ஆதிக்கத்தை முறியடித்தே வந்துள்ளனர் சீக்கியர்கள். தங்கள் சமய நம்பிக்கைகளை சனாதன கோட்பாடு உள்வாங்க நடைபெறும் முயற்சிகளை இப்போதும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்தியாவில் பன்னெடுங்காலமாக நடைபெறுவது பவுத்தத்துக்கும் சனாதனத்துக்கும் இடையேயான போர் என்பார் புரட்சியாளர் அம்பேத்கர்.

வரலாற்று பார்வையோடு சமீபத்திய சம்பவங்களை அணுகினால், நடப்பவை என்ன்வென்று நாம் அறிந்துகொள்ளலாம். கனடாவின் குற்றச்சாட்டை ஒன்றிய பாஜக அரசு திட்டவட்டமாக மறுத்தாலும், மறுபக்கம் எக்ஸ், வாட்சப் உள்ளிட்ட தளங்களில் நிஜ்ஜாரின் படுகொலையை மோடியின் அரசு செய்தது என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தியாவுக்கு பாடமெடுத்த அமெரிக்கா!


ஜி20 மாநாட்டுக்காக இந்திய வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் இருந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்களை சந்திக்கவே இல்லை. மோடி - பைடன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்தது 56 இன்ச் மார்பளவு கொண்டவரின் அரசு. ஆனால் இந்தியாவிலிருந்து நேரடியாக கம்யூனிச நாடான வியட்நாம் சென்ற அமெரிக்க அதிபர் பைடன், அங்கு ஊடகவியலாளர்களை சுதந்திரமாக சந்தித்தார். அப்போது அவர், ‘இந்திய பயணத்தின் போது மனித உரிமைகளை மதிப்பது குறித்தும், வலிமையான, வளமான நாட்டுக்கு சுதந்திரமான ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.


ஜனநாயகத்தின் தாய்நாடு என்று ஜி20ல் வாயளந்தார் மோடி. ஆனால் கம்யூனிச நாட்டில் நின்றுக்கொண்டு, இந்தியாவில் மோடிக்கு பாடமெடுத்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பைடன்.


கனடாவுக்கு ஆதாரங்களை அளித்தது யார்?


அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகள், தங்களுக்கிடையே பரஸ்பர உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பை கொண்டுள்ளன. இதற்கு ‘ஃபைவ் ஐஸ் உளவு கூட்டமைப்பு’ (Five Eyes Intelligence Alliance) என்று பெயர். 


நிஜ்ஜாரின் படுகொலை குறித்த முக்கிய ஆதாரங்களை இந்த உளவு கூட்டமைப்பை சேர்ந்த ஒரு நாட்டிடம் இருந்து தான் கனடா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது பெரும்பாலும் அமெரிக்கா அல்லது பிரிட்டனாக இருக்கக்கூடும். நிஜ்ஜார் கொலை குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் பேசிய உரையாடல்களும் அதில் அடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.


ஜெய்சங்கரின் அமெரிக்க பயணம்


இந்தியா - கனடா மோதல் பின்னணியில் கடந்த வாரம் அமெரிக்கா சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். அங்கு செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு. வேறு எவரிடமிருந்தும் கருத்துரிமை குறித்து எங்களுக்கு எந்த பாடமும் தேவை இல்லை’ என்றார்.

சர்வதேச ஊடக சுதந்திர குறியீட்டில் (Press Freedom Index) மொத்தமுள்ள 180 நாடுகளில் 2022ஆம் ஆண்டும் 150வது இடத்தில் இருந்த இந்தியா, 2023ஆம் ஆண்டு 161வது இடத்துக்கு இன்னும் கீழே தள்ளப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளாக ஊடகவியலாளர் கேள்விகளை எதிர்கொள்ள பயப்படும் பிரதமர், காஷ்மீரின் மயான அமைதியை செய்தியாக்கியதால் சிறையில் வாடும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள், வெளிநாட்டு மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும் ஊடகவியலாளர்கள் என இந்தியாவின் ஊடக சுதந்திரம் உலக அரங்கில் பல்லிளிக்கிறது.



மேலும் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ‘இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா என்று சவால்விடுகிறேன்’ என்றார்.

கடந்த வாரம் தான் இந்திய பாராளுமன்றத்தில் டேனிஷ் அலி என்ற இஸ்லாமிய எம்பி குறித்து அச்சில் ஏற்ற முடியாத வசை சொற்களை பேசியது பாஜகவின் எம்பி. ரமேஷ் பிதூரி என்பதும், அவருக்கு எதிராக நடவிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக பிதூரியை பாஜக நியமித்துள்ளதையும் ஜெய்சங்கர் வசதியாக மறந்துவிட்டார் போல.

பாஜக மூத்த தலைவர்கள் ஆர்ப்பரிக்க வெறுப்பை கக்கிய பிதூரி

நிஜ்ஜார் படுகொலை மற்றும் கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘கனடாவின் குற்றச்சாட்டை மிகத்தீவிரமானதாக அமெரிக்க அரசு கருதுகிறது. கனடாவின் விசாரணை முழுமை பெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவுக்கு சிறப்பு சலுகை எதுவும் தரப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும் கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

ஏற்கனவே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் எல்லைகளை ஆக்கிரமித்து சாலைகளையும், கிராமங்களையும் சீனா அமைத்து வருவதை எதிர்க்க முடியாமல், சீனா என்ற பெயரையே உச்சரிக்க பயந்து வாய்மூடி அமைதி காத்து வரும் பிரதமர் மோடி, அமெரிக்கா குறித்து மட்டும் வாய் திறப்பாரா என்ன?



அதுவும் அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், குடியரசு தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மோடி அழைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க பொதுத்தேர்தலின் போது அங்கு சென்று டிரம்புக்கு வாக்கு கேட்டவர் தானே மோடி?

மோடியின் விஸ்வகுரு எனும் வெற்று விளம்பரத்துக்கு இன்னும் என்ன விலை கொடுக்கப் போகிறதோ இந்தியா?

வன்னி அரசு.

06 July 2023

பொது சிவில் சட்டத்தை அம்பேத்கர் ஆதரித்தாரா? பாஜகவின் பொய்மூட்டை அம்பலம்!




பாஜக - சங் பரிவாரம் தனக்கு  ஆதரவு தேடுவதற்காக, அவ்வப்போது அண்ணல் அம்ப்பேத்கரின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் புரட்சியாளர் அம்பேத்கரை முஸ்லிம் விரோதி என்று காட்டுவதற்காக பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினைஎன்ற நூலிலிருந்து தனக்கு வேண்டிய சில வாக்கியங்களை மட்டும் பயன்படுத்தியது. அந்த நூலில் அவர் மதவெறியின் காரணமாக இரு சமூகத்தினரிடையே நடந்த வன்முறைச் செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறாரே தவிர,


முஸ்லிம்களை மட்டும் அவர் குறியிலக்காகக் கொள்ளவில்லை. இரண்டாவதாக, அவருடைய விமர்சனம் முஸ்லிம் லீக் மீதுதானே தவிர சாதாரண முஸ்லிம் குடிமக்கள் மீது அல்ல. மிகச் சிறந்த சட்டமேதை என்ற வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் முஸ்லிம் லீக், இந்து மகா சபை ஆகியவற்றின் நிலைப்பாடுகளைத் தனித்தனியாகப் பரிசீலித்து மதத்தின் அடிப்படையில் தேசங்களை உருவாக்கக்கூடாது என்ற தனது முற்போக்கான, சமயச்சார்பற்ற விவாதத்தை  முன்வைத்ததுடன், பல்வேறு சமுதாயங்கள் ஒரே தேசத்தில் வாழ்வதற்கான பல எடுத்துக்காட்டுகளைக் கூறினார்.


அதேவேளை, முஸ்லிம்கள்  அதாவது முஸ்லிம் லீக் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டுமென்று விரும்பினால், அதேவேளை வி.டி.சாவர்க்காரின் இந்து ராஷ்டிரக் கோரிக்கையைப் பற்றி எழுதுகையில்இந்து ராஷ்டிரம் இந்தியாவில் யதார்த்தமானதொன்றாக ஆகிவிடுமானால், அதைவிடப் பேரழிவு இந்திய நாட்டுக்கு வேறு ஏதும் இருக்க  முடியாது"


என்று எச்சரிக்கவும் செய்தார்.


அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு நகலை சமர்ப்பிக்கும் புரட்சியாளர் அம்பேத்கர்


அதேபோல காஷ்மீர் பிரச்சினையைப் பொருத்தவரை அண்ணலின் கருத்தும் தனது கருத்தும் ஒன்றேதான் என்று அரசியல் சட்டப் பிரிவு 370- இரத்து செய்தபோது சங்பரிவாரம் பேசி வந்தது. ஆனால், அம்பேத்கரின் நிலைப்பாடு இந்துத்வாதிகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தது.


அதாவது,


ஜம்மு காஷ்மிரை இந்தியாவிற்கு சொந்தமானது என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான  ரூபாய்களை இந்திய இராணுவத்திற்காக செலவிடுவதைவிட,  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மிர் பள்ளத்தாக்கை பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிட்டு, பெளத்தர்கள் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள லடாக் பகுதியையும் சீக்கியர்களும் இந்துக்களும் பெரும்பான்மையாகக் கொண்ட ஜம்மு பகுதியை இந்தியாவிடமும் வைத்துக் கொள்லலாம் என்று ஆலோசனை கூறினார்.

 

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல,


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வமான ஏடானபஞ்ச்ஜன்யாஅண்ணலின் 125வது பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிறப்பிதழைக்  கொண்டு வந்து அவரைஇந்துவாகஆக்கச் செய்த முயற்சித்து படுதோல்வியடைந்தது.


புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்த சமயம் தழுவிய பொழுது உடன் அன்னை சவிதா அம்பேத்கர்

இப்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக சங்பரிவாரம்,  சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்றவற்றைப் போலவே தனது கிளை உறுப்புகளிலொன்றாக்கிகொண்ட சட்ட ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்றுள்ளது மோடி ஆட்சி.


கடந்த ஜூன் மாதம் அமெரிக்க, எகிப்து பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய கையுடன் மணிப்பூர் எரிந்து கொண்டிருப்பதைப் பற்றியோ  வேறு உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளைப் பற்றியோ பேசாமல் மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கூட்டத்தில் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் மோடி. பொது சிவில் சட்டம் கொண்டுவருவதைப் பற்றிப் பேசுகையில், இந்தியாவிலுள்ள எல்லா மதத்தினரும் ஒரே தாய்மக்கள் என்றும் எனவே ஒரு மதத்தினருக்கு ஒரு சிவில் சட்டம், இன்னொரு மதத்தினருக்கு இன்னொரு சிவில் சட்டம் இருப்பது பாரபட்சம் காட்டுவதுதான் என்று ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதுபோலப் பேசினார். ஆனால் புதிய குடியுரிமைச் சட்டம் பாரபட்சம் காட்டுவதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.


இப்போது  ஏற்கெனவே இரண்டாம்பட்ச, மூன்றாம் பட்சக் குடிமக்களாக்கப்பட்டுவிட்ட முஸ்லிம்களைக் குறிவைத்துத்தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுவதை மோடி மூடிமறைக்கிறர். அவரது சங் பரிவாரம் அதற்காக மீண்டுமொருமுறை புரட்சியாளர் அம்பேத்கரைப் பயன்படுத்த விரும்புகிறது.


முதலில் பொது சிவில் சட்டம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்...

 

மதங்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வருதல்தான் பொது சிவில் சட்டம் Uniform Civil Code அல்லது Common Civil Code எனப்படுகிறது.





அதாவது புரட்சியாளர் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர விரும்பியதன் நோக்கத்தை - மக்களை மத அடிப்படையில்முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தும் தனது நோக்கத்துடன் இணைக்க விரும்புகிறது சங்பரிவாரம். இதைப் பொருத்தவரை அண்ணல் அம்பேத்கரின் நிலைப்பாட்டுக்கும் சங்பரிவாரத்தின் குறிக்கோளுக்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பு அவையில் பொது சிவில் சட்டத்திற்கான சட்டப் பிரிவு 35ஐக் கொண்டுவந்ததற்கான நோக்கம் இந்தியாவில் எல்லா மதத்தினரிடையேயும் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதற்காகத்தான். அந்த சட்டத்தை முன்மொழியும்போது அவர் கூறினார்: “நமது  வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கூடிய வகையில் மதத்திற்கு இவ்வளவு பெரிய விரிவான அதிகார வரம்பு கொடுக்கப்பட்டிருப்பதும் அதன் களத்தின் ஆட்சியெல்லைக்குள்  அரசமைப்பு அவை  நுழையவிடாமல் தடுக்கப்படுவதும் ஏன் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. நமக்கு இந்த சுதந்திரம் எதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது?   சமத்துவமின்மைகளும் ஏற்றத்தாழ்வுகளும் பாரபட்சங்களும்,


இன்னும் இது போன்றவையும் நிரம்பியுள்ள, நமது அடிப்படை உரிமைகளுடன் முரண்படுகிற நமது சமூக அமைப்பைச் சீர்திருத்துவதற்குதானே நாம் இந்த சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம்? ஆகவே அரசமைப்பு அவையின் அதிகார வரம்புகளிருந்து தனிநபர் சட்டம் விலக்கப்பட்ட வேண்டும் என்பதை எவரால் நினைத்துப் பார்க்க முடியும்?” (Christopher Jafferlot, Dr Ambedkar and Untouchability_ Analysing and Fighting Caste - Hurst & Company, 2005, pp. 1114-115.) என்றார் அம்பேத்கர்.


அன்று பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் உறுப்பினர்கள் மட்டுமே எதிர்த்தார்களா?அரசமைப்பு அவையில் இருந்த வி.டி.சாவர்க்கரின் இந்து மகா சபை உறுப்பினர்கள், காங்கிரஸிலிருந்த  இந்துப் பழைமைவாதிகள் ஆகியோரும் கடுமையாக எதிர்த்தார்கள்.


நவீன இந்தியாவின் சிற்பி புரட்சியாளர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட தருணம்

ஆக, அண்ணல் அம்பேத்கர் சமூக நீதியை, சாதிபேதமற்ற சமுதாயத்தை, சோசலிசப் பொருளாதாரத்தை இந்தியாவில் கொண்டுவர விரும்பினாரே, அந்த இலட்சியத்துடன்தான் பொது சிவில் சட்டத்தில் அவருக்கிருந்த விருப்பத்தை இணைத்துப் பாரக்க வேண்டும். ஆனால், அன்று இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளிலொன்றாக ஆக்குவதற்கு உகந்த  சூழல் இல்லாமல் போனதால் அதை வழிகாட்டும் நெறிகளிள் (Directive Principles) – அரசமைப்புச் சட்டப் பிரிவு 44ஆக - உள்ளடக்குவதற்கு மேல் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை. அரசமைப்புச் சட்டப்பிரிவு, நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்படக் கூடியது அல்ல. மாறாக, 1950இல் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டப் பிரிவு 44 (வழிகாட்டு  நெறிகளில் ஒன்று)


இந்தியாவின் எல்லாப் பிரதேசங்களிலும் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கு அரசு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்என்றுதான் கூறுகிறது. ஆனால் அதை அடிப்படை உரிமையாக்குவதற்கு, நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்துகின்ற அடிப்படை உரிமையாக்குவதற்கு மோடி அரசாங்கம் இப்போது முயற்சி செய்கிறது.


அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய, கடைசியில் வழிகாட்டு நெறிகளில் ஒன்றாக மட்டுமே போய் முடிந்த அந்தப் பொது சிவில் சட்டமும்கூட பல்வேறு மதத்தினர் தங்கள் மறை நூல்கள், சம்பிராதயங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிராததாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் மனுநூலை வழிபடும், சங் பரிவாரம், முதலில் 1936ஆம் ஆண்டிலேயே அண்ணல் அம்பேத்கர் பரிந்துரைத்தது போல இந்துக் கோவில்கள் அனைத்திலும் அனைத்து சாதியினரையும்  அர்ச்சகர்களாக்க முன்வருமா? இன்றும்கூட இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள திரெளபதி முர்மு, மற்ற சாதியினரிலிருந்து விலகி நின்றுதான் சாமி கும்பிட வேண்டியதாக உள்ளதே. இந்தியா சுதந்திரம் பெற்று  முக்கால் நூற்றாண்டாகியும் இந்திய சமுதாயத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகளோ, பொருளாதாரா ஏற்றத்தாழ்வுகளோ மாறவில்லை. கார்பரேட் சக்திகளின் கைப்பாவையாக, சனாதன வருணதர்மத்தின் காவலர்களாக உள்ள சங்பரிவாரத்தினர் கூறும் பொது சிவில் சட்டமும் அண்ணல் அம்பேத்கர் விரும்பிய பொது சிவில் சட்டமும் அடிப்படையிலேயே வேறுபட்டவை.





இரண்டாவதாக, பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது  குறித்து  அண்னல் அம்பேத்கர் கூறிய வேறு கருத்துகளை சங் பரிவாரமும் மோடியும் திட்டமிட்டு மூடிமறைக்கிறார்கள். அரசியல் சட்டப் பிரிவு 35இன் போது நடந்த விவாதங்களின்போது புரட்சியாளர் அம்பேத்கர் ஓர் உண்மையான ஜனநாயகவாதியாக, குடிமக்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டவராகவே பேசினாரேயன்றி ஒர் சர்வாதிகாரியைப் போல அல்ல. இந்தியாவிலுள்ள எல்லா முஸ்லிம்களுக்கும் காலங்காலமாக  ஒரே மாதிரியான பொது சிவில் சட்டங்கள் இருந்தன என்று சில முஸ்லிம் உறுப்பினர்கள் கூறியதை மறுத்து,  இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் வெவேறு சிவில் சட்டங்களைப் பயன்படுத்தினார்கள் என்றும், சில இடங்களில் இந்துக்களின் சிவில் சட்டங்களைக்கூடப் பயன்படுத்தினார்கள் என்றும் தக்க ஆதாரங்களுடன் பேசினார். இந்தியாவின் வெவ்வேறு பகுதியிலிருந்த முஸ்லிம்கள்  அந்தந்த பகுதியிலிருந்த கலாசாரத்தையும் மரபுகளையும் பின்பற்றியதற்கு எடுத்துக்காட்டாக மலபாரில் இருந்தமருமக்கள் தாயம்’ (தாய்வழி சொத்து உறவு முறை) இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு தரப்பினராலும் பின்பற்றப்பட்டதைக் குறிப்பிட்டார். அது பொது சிவில் சட்டத்தால் சேர்க்கப்பட்டது.


இந்துச்சட்டம் என்பதால் அல்ல, மாறாக அது  இருசாராருக்கும் பொருத்தமானது  என்பதால்தான் என்றும், எனவே  முஸ்லிம்களுக்குப் பெரும் தீங்கு இழைக்கப்பட்டுவிட்டதாகக்  கருதக்கூடாது என்றும் கூறிய புரட்சியாளர் அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு  ஒரு உறுதி மொழியையும் வழங்கினார். அதாவது , அரசு ஒரு பொது சிவில் சட்டத்தை இயற்றிவிட்டது என்ற காரணத்துக்காகவே குடிமக்கள் எல்லோர் மீதும், அவர்கள் குடிமக்கள் என்பதற்காகவே அதை அரசால் வலுக்கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது. பொது சிவில் சட்டத்திற்குக் கட்டுப்படுத்துவதாக உறுதிமொழியளிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் வகையில் கடைப்பிடிக்க விரும்புவதாக யாரெல்லாம் உறுதிமொழி கூறுகிறார்களோ, அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஆகவே தொடக்கத்தில் இந்த சட்டம் (பொது சிவில் சட்டம்) அவரவரது  தன்விருப்பம் சார்ந்ததாகவே இருக்கும். இத்தகைய சட்டத்தை இயற்றுவது  நாடாளுமன்றத்துக்கு சாத்தியமானதாகவே இருக்கும். ஆகவே நமது  (முஸ்லிம்) நண்பர்கள் வெளிப்படுத்திய  அச்சம் முற்றிலுமாக நீக்கப்படுகிறது (Baba Saheb Ambedkar Writings and Speeches, Volume 13, pp.362-363.)



இப்படி அம்பேத்கர் தெளிவு படுத்திய பிறகும் பாஜகவினர் அம்பேத்கரை தங்களது வாதங்களுக்கு அழைக்கலாமா?


பாஜகவின் நோக்கம் என்ன?


பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாக இந்து பெரும்பான்மை வாதத்தை முன்வைத்து அரசியல் செய்ய பாசக திட்டமிடுகிறது. பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் எதிர்ப்பதாக ஒரு நாடகத்தை ஆடி அதன் மூலம் இந்துஇந்து அல்லாதவர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாசக முயற்சிக்கிறது.


பொது சிவில் சட்டம் நல்லது தான் அது சாதிரீதியான, மத ரீதியான தனித் தனி சட்டங்களை ஒழிக்கும் என இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் வாதிடுகின்றன. ஆனால், பொது சிவில் சட்டம் இதனை மேலும் கூர்மையாக்கி சமூக பிளவை உறுதி செய்கிறது. பொது சிவில் சட்டம் நல்ல விஷயம் என்று தோன்றலாம்.


இந்துக்கள் மத்தியில் சாதி அடிப்படையில் தனி சிவில் சட்டம் இருக்கிறதே. அதனை இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகள் மூலமாக ஏன் ஒழிக்க முடியவில்லை? தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால் கூட எத்தனை சாதிய குழுக்கள் பட்டியலின மக்களுக்கு எதிராக சாதிய சங்கங்கள் மூலமாக தனிச்சட்டத்தை வாய்வழியாக இயற்றி அதன் மூலம் ஆதாயம் அடைகிறார்கள். அதனை இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகள் மூலமாக ஒழிக்க பாஜக இதுவரை என்ன செய்துவிட்டது. தாம் மேல் சாதி என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் பட்டியலின மக்களை காலில் விழ வேண்டும் என்ற தண்டனையைக் கொடுக்கிறார்களே. அதனை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் ஒழிக்க முடிந்ததா?





இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை (Hindu Code Bill) அம்பேத்கர் கொண்டு வர முயன்ற பொழுது அதற்கு நேரு அமைச்சரவையில் இருந்த வலதுசாரி சிந்தனை கொண்ட ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், மதன் மோகன் மாலவியா எதிர்த்ததினால் தானே நேருவால் மசோதாவை சட்டமாக்க முடியவில்லை. அதனால், தானே அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். அம்பேத்கர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தானே பின்னாளில் பல தார மணம் தடை செய்யும் வகையில் பெண்களுக்கும் சொத்துரிமை இருக்கும் வகையில் சிறிய சீர்திருத்தங்களை ஒன்றிய அரசு செய்ததை மறுக்க முடியுமா? 1950களுக்கு பிறகு கொண்டு வரப்பட்ட இந்த சிறிய சீர்திருத்தத்தைக் கூட இன்றைக்கு வரை நடைமுறைப்படுத்த முடியவில்லை. நடைமுறைப்படுத்த பாசக இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கிராமப்புற இந்து மேல்சாதி ஆணாதிக்க வகையில் தான் இந்த சீர்திருத்த சட்டங்களே உள்ளன.





கிராமப்புற சாதி பஞ்சாயத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை. அதனை தடை செய்யாத மோடி இஸ்லாமியர்களை குறிவைத்து பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர துடிக்கிறார். மேல்பாதி, புதுக்கோட்டை  வேங்கைவயல் கிராமங்களில் இதுவரை சாதியை திமிர் தாண்டவமாடுவதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதனை சட்டத்தின் துணை கொண்டு மாற்றி அமைக்க பாசகவோ பிரதமர் மோடியோ என்ன செய்துவிட்டனர்.

 

பொது சட்டங்கள் இருந்தும் தொடரும் சாதிய கொடுமை!

 

சிதம்பரம் கனக சபை மீது பொதுமக்கள் ஏறி வழிபாடு நடத்த முடியவில்லை.அதனை தீட்சிதர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தங்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என தீட்சிதர்கள் முறையிடுகின்றனர். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நோக்கம் இருக்கும் ஒன்றிய அரசு தீட்சிதர்களிடம், இந்தியா ஒரு ஜனநாயக நாடு, கடவுளை வழிபடவும் கடவுளுக்கு சடங்குகள் செய்யவும் அனைவருக்கும் சம உரிமை உண்டு அதனால், தீட்சிதர்களின் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று வெளிப்படையாகவே சொல்ல வேண்டியது தானே. அதனை செய்ய ஏன் தயங்குகிறார்கள்?


சிதம்பரம் கனகசபையை மூடிய தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரியுடன் வாக்குவாதம்

விழுப்புரம் மேல்பாதியில் நடப்பது என்ன? திரௌபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்த குற்றத்திற்காக பட்டியலின மக்கள் தாக்கப்படுகிறார்கள். கோயில் இழுத்து பூட்டப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மேல் சாதி என்று தங்களை சொல்லிக்கொள்ளும் மக்களிடம் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து அவர்களை வன்முறைக்கு தூண்டிவிடுகிறார். சட்டம் படித்த ஒரு வழக்கறிஞரே அந்த சட்டத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, சாதிய குழுக்கள் சொல்லும் தனிச் சட்டத்திற்காக வன்முறையைத் தூண்டிவிடுகிறார். இதனை தடுக்க என்ன செய்தது ஆர்.எஸ்.எஸ். பாசக கும்பல். மாறாக, அவர்களோடு சேர்ந்து கொண்டு பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைத்து அரசியல் குளிர்காய தானே ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ, சாதிய குழுக்கள் மேல்பாதியில் அரசியல் செய்தன.


தலித்துகளை அனுமதிக்க மறுத்த கோயிலுக்கு சீல் வைத்த தமிழ்நாடு அரசு

சிதம்பரம் தீட்சிதர்களை கட்டுப்படுத்த தவறுபவர்களே பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்?  மேல்பாதியில் சாதிய குழுக்களுக்கு துணை நின்று, வழிபாட்டு உரிமையில், மரபை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லும் இந்துத்துவ சனாதன குழுக்கள், பொது சிவில் சட்டத்தை அனைவரும் சமம் என்ற கோணத்திலா கொண்டு வருவார்கள்?


பொதுசிவில் சட்டத்தை அம்பேத்கர் ஆதரித்ததாக சொல்லப்படுவது சாதிய ஒழிப்புக்கான ஒரு கருவியாக அது பயன்படும் என்று நம்பினார். ஆனால், இந்து சட்டத் தொகுப்பு எதிர்த்தவர்கள். தேசம் சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவு பட்டுவிடக்கூடாது என்று அம்பேத்கர் சொன்ன யோசனைகளை புறந்தள்ளிய இந்துத்துவ சனாதனவாதிகள் இன்றைக்கு அம்பேத்கரின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுகிறார்கள்.


இந்து சமய அறநிலையத்துறை வேண்டாம்!


அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கவும், அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்றும் தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளை செய்தது. அதையெல்லாம் தடுத்தது யார்? இதே சனாதன பாசிச கும்பல் தானே? கோயில்களை ஜக்கிவாசுதேவ், ஸ்ரீஸ்ரீ போன்றோர் தங்கள் வசம் கொண்டு வரவும், தனிநபர்கள் வசம் இந்து கோயில்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் இந்து சமய அறநிலையத்துறையே இருக்க கூடாது என்று கூச்சலிட்ட கதையெல்லாம் மறந்துவிடவா போகிறோம்.  பொதுசிவில் சட்டம் தனிநபர், தனி சாதிய, மதவாத சனாதன குழுக்களின் தனி சட்டத்தை ஒழுக்க எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. கோயில்களை தனிநபர் வசம் கொண்டு வரவேண்டும் என பேசிய ஹெச். ராஜாவுக்கு இந்தியாவின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை முதலில் சொல்லிக்கொடுக்க ஒன்றிய பிரதமர் மோடி என்ன செய்தார்?



அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தான் பொது சிவில் சட்டம். ஆனால், அதனை சனாதன பாசிச கும்பல் தடுத்து நிறுத்தி வன்முறையை தூண்டியது. கோயில் கருவறையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவால் சென்று வழிபாடு நடத்த முடியும். ஆனால், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் வழிபாடு நடத்த முடியாது. அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவு தங்களை உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் சமூகம், ஆனால், குடியரசு தலைவர் முர்மு பழங்குடியினம். அஸ்வினி வைஸ்ணவிற்கு ஒரு சட்டம், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு சட்டம் இருப்பதை இந்த மோடி அரசாங்கம் துடைத்தெறிய என்ன செய்தது?





முர்முவை கோயில் கருவறைக்குள் கொண்டு சென்று வழிபாடு நடத்த வைத்திருந்தால் இந்த பாசக சொல்லும் பொது சிவில் சட்டத்தை சந்தேகம் இல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், அங்கு, கோயில் மரபு, பழக்க வழக்கம் என்று பார்ப்பன சனாதன கும்பலுக்கு துதிபாடிய பாசக சனாதன கும்பல் இன்று பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிரித்துப் பார்க்கிறது.




இந்தியாவில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. இதில், பல லட்சக்கணக்கான சாதிய பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆணவ படுகொலைகள் நடக்கின்றன. ஆணவ படுகொலைகளைத் தடுக்க ஆணவ படுகொலை சட்டத்தை ஏன் இதுவரை பாசிச பாசக கொண்டு வரவில்லை? சாதிய பஞ்சாயத்துக்கள் மூலமாக தனி மனித அடையாளங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனவா? சாதிய பஞ்சாயத்துக்கள் முன்பைவிட பாசக ஒன்றியத்தில் பொறுப்பேற்ற பிறகு இன்னும் அதிகரித்துள்ளது. இது தான் கள யதார்த்தமாக உள்ளது.


லவ் ஜிகாத் முதல் ஆணவக்கொலை வரை...


யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரிவினைப் பார்க்க கூடாது என்கிறது பொதுசிவில் சட்டம். இந்த பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகத்தான் ஒன்றிய பாசக பரப்புரை செய்கிறது. யதார்த்தம் என்ன? இஸ்லாமிய இளைஞர் ஒரு இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அங்கு சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய ஒன்றிய அரசு, பாசக அதை செய்யாமல் இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்தால் அதனை லவ் ஜிகாத் என்று தானே பேசுகிறது. சமீபத்தில் கர்நாடக தேர்தல் வந்த பொழுது ஒன்றிய பிரதம மந்திரி நரேந்திர மோடி என்ன செய்தார், கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை வைத்து அரசியல் செய்தவர் தானே மோடி. இஸ்லாமிய இளைஞர் காதலித்து திருமணம் செய்யும் பொழுது அதனை லவ் ஜிகாத் என்று கூறி பிரிவினையை தூண்டும் சனாதன பாசிச பாசக, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக ஆடும் நாடகத்தை மக்கள் ஏற்பார்களா?



கௌசல்யா, கோகுல் ராஜ் விவகாரத்தில் சாதிய தனிச்சட்டத்தை ஒழிக்க இந்த இந்துத்துவ சனாதன பாசிச பாசக என்ன செய்தது? அவர்களை துண்டாடியது. தருமபுரி இளவரசனுக்கு நடந்ததை யாரால் மறக்க முடியும். சட்டத்தை மீறி சாதிய குழுக்கள் வெளிப்படையாகவே சாதிய அரசியல் செய்ததே. அதனை தடுக்க பாசிச பாசக எந்த ஒரு துரும்பையும் கிள்ளி எறியவில்லை. இஸ்லாமிய இளைஞர் காதலித்தால் அதனை லவ் ஜிகாத் என்று பூச்சாண்டி ஆடுவதும், பட்டியலின இளைஞர் காதலித்தால் அவர்களை கொன்று குவிப்பதும், பொதுக்கோயிலில் பட்டியலின மக்களும், பொதுமக்களும் நுழைந்து கனகசபையில் வழிபாடு நடத்தினால் அங்கே புனிதம் கெட்டுவிட்டது என்று புலம்புவதும் இந்த இந்துத்துவ சனாதன பாசிச பாஜகவின் இரட்டை நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளதை வரலாறு கண்முன்னே காட்டுகிறது



இங்கெல்லாம் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த பாசக என்ன முயற்சி எடுத்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகமால் என்ற தமிழ்நாடு அரசின் முயற்சியை பாசகவின் ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். கும்பல் தானே எதிர்க்கிறது. அதனை முதலில் தடுக்கலாமே.


இந்து அன் டிவைடட் ஃபேம்பி ஆக்ட் (Hindu Undivided Family Act - HUF):


1947க்கு பிறகு கொண்டு வரப்பட்ட இந்து அன் டிவைடட் ஃபேம்பி ஆக்ட் தனிச் சொத்தை பாதுகாப்பதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது. இது இந்து பெருமுதலாளிகளின் சொத்தை பாதுகாக்க முயலுகிறது. இதில், பெண்கள் பாகப்பிரிவினை கேட்பதை இதுவரை வருமான வரித்துறை சட்டத்தில் இந்த இந்து பாசிச பாசக சேர்க்கவில்லை.


பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. கணவன் சம்பாதித்து வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது. ஆனால், இதனை எதிர்ப்பது இந்துத்துவ பாசிச கும்பல் தானே. பெண்களுக்கான சம பாகப்பிரிவினையை நடைமுறைப்படுத்தாதவர்கள் எப்படி பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்?





இதே போல முக்கியமான ஒரு சூழ்ச்சியையும் இந்த ஒன்றிய பாசிச பாசக செய்கிறது. இந்தியாவில் சமணம், சீக்கிய மதங்கள் தனி மதங்களாக உள்ளன. இந்த சமண, சீக்கிய மதங்களை இந்து அன் டிவைடட் ஃபேமிலி ஆக்டிற்குள் கொண்டு வந்து இந்து கூட்டுக்குடும்ப சட்டத்தின் மூலம் பெருமுதலாளிகளின் சொத்தை இந்து பாசிச பாசக பாதுகாக்கிறது. சமண, சீக்கிய மதங்களில் இருக்கும் பெருமுதலாளிகள் தங்களின் சொத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்த சூழ்ச்சியை புரிந்துகொண்டும் கண்டும் காணாமல் உள்ளனர்.


அம்பேத்கர் வலியுறுத்திய பொது சிவில் சட்டத்திற்கும் இன்றைக்கு பாசிச பாசக கொண்டு வந்திருக்கும் பொது சிவில் சட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனை தான் நான் விரிவாக விளக்கியுள்ளேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இதில், சட்டத்தின்படி தான் ஆட்சி நடக்கிறது. இங்கு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை தான் இந்திய சட்டமும் வலியுறுத்துகிறது. சுதந்திரம் கிடைத்துவிட்டது. சகோதரத்துவம் கிடைத்தால் தான் சமத்துவம் என்பதே சாத்தியம் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். இந்த சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், முதலில், சாதிய பஞ்சாயத்துக்களை ஒழிக்க வேண்டும்.


தாங்கள் கடவுளின் அவதாரம், கடவுளுக்கு அருகில் சென்று வழிபடும் உரிமை தங்களுக்குத் தான் இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பன, தீச்சதர் கும்பலிடம் சொல்லி கோயில் அனைவருக்கும் பொதுவானது அதில் யாரும் வழிபடலாம் யாரும் கோயில் கருவறையில் செல்லலாம் என்று வகுப்பெடுத்துவிட்டு அதன் பிறகு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். யாரும் யாரையும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை உணர்த்தும் வகையில் லவ் ஜிகாத் பிரச்சாரத்தை குப்பைத் தொட்டியில் போடுவதாக இந்த இந்துத்துவ பாசிச பாசக கும்பல் வெளிப்படையாக சொல்லட்டும். அதனை விட்டுவிட்டு, வரலாற்றில் அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்தை திரித்து சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் புரிதல் இன்றைக்கு மக்களிடம் அதிகரித்துள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். பாசகவின் இந்த சூழ்ச்சி ஒருநாளும் வெற்றி பெறாது. 

 


 

பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர அண்ணல் அம்பேத்கரின் விருப்பத்தை அவர் கொண்டு வர வுரும்பிய இந்து சட்டதொகுப்பு மசோதாவுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அந்த சட்டத்தை வி.டி.சாவர்க்கரின் இந்து மகாசபை உறுப்பினர்களோடு சேர்ந்து காங்கிரஸிலிருந்த பழைமைவாதிகளும் சங்க் பரிவாரத்தினரால் போற்ற்ப்படுபவர்களுமான இராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்ற பழமைவாதிகளும் எதிர்த்தனர். இந்து சட்டத் தொகுப்பில் அவர் சாதி மறுப்புத் திருமணத்தை உள்ளடக்கிய போது, அவரைத் தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசியவர் டி.பார்காவா என்ற இந்து உறுவினரேயன்றி முஸ்லிம் உஏஉப்பினர்கள் அல்லர்.  அன்று  அம்பேத்கர் சவிதா அம்மையாரைத் திருமணம் புரிந்துகொண்டதற்குச் சட்டத் தகுதி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்தார் என்று கொச்சைப்படுத்தியவர் அந்த இந்துதான்.


இந்திய சமுதாயத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்காகக புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்திக்த்திக் கொள்ள சங் பரிவாரம் மீண்டும் முயல்வது அதன் நீண்டகால வரலாறு. அந்த முயற்சியை நாம் உறுதியுடன் முறியடிக்க வேண்டும்.


ஒவ்வொரு பொதுத்தேர்தலுக்கு முன்பும் ஒரு வன்முறையை தூண்டுவது அல்லது வன்முறை செய்வது அதன் மூலம் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதுதான் பாஜகவின் செயல்திட்டம்.


கடந்த 2019 தேர்தலுக்கு முன் மோடியின் உயிருக்கு ஆபத்து என்பதை முன்வைத்து கடந்த 2018 சனவரி அன்று பீமா கோரேகான் சம்பவத்தையொட்டி அறிஞர் பெருமக்களும் சமூகசெயற்பாட்டாளர்களும் 16 பேர் NIA வால் கைது செய்யப்பட்டனர்.


பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் (வலது - பீமா கோரேகான் நினைவு தூண்)

அதில் ஒருவர் அருட்தந்தை ஸ்டேன்சாமி காவலிலிலேயே மரணித்தார்.ஆனாலும் இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை.


அதே போல, 2019 பிப்ரவரி 14 அன்று புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.


பாகிஸ்தானுக்கு எதிரான போர் என எழுப்பி போலி தேசபக்தி மூலம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தது பாஜக.


இப்போது பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார் இந்திய தலைமை அமைச்சர் மோடி. இதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை கவரலாம் என்பது தான் பாஜகவின் உத்தி. இது வெறும் வாக்குகளுக்காக மட்டுமல்லாது,


வீரர்களின் பிணக்குவியலின் மீது வாக்கு கேட்ட மோடி

RSS இயக்கத்தின் ஒரே நாடு ஒரே மொழி ஒரே சட்டம் அது இந்து ராஷ்டிரம் என்னும் கனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான். 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக இந்து ராஷ்டிரம் படைப்பதற்காக, இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கிய சிறப்புச்சட்டங்களை எல்லாம் தகர்த்து வருகின்றன.


அதில் ஒன்று தான் சுதந்திர இந்தியாவின் போது, காஷ்மீருக்கு வழங்கிய 370 ரத்து செய்யப்பட்டது.


நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே 370 ரத்து செய்யப்பட்டது.


அதே போல புதிய குடியுரிமை திருத்தச்சட்டம் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பை பாஜக அரசு சந்தித்தது.மத அடிப்படையில் சட்டத்தை திருத்தக்கூடாது என்பது தான் அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படை. ஆனால், அந்த அடிப்படையை மதிக்காமல் மத அடிப்படையில் மக்களை பாகுபடுத்தி திருத்தப்பட்டது தான் புதிய குடியுரிமை திருத்தச்சட்டம்.


இப்போது பொது சிவில் சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது பாஜக.


இதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்பதற்காக சூன் 14,2023 முதல் சூலை 14 வரை கால வரையறை செய்துள்ளது 22வது சட்ட ஆணையம்.


பொது சிவில் சட்டம் தொடர்பாக 21 வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்ட போது அதன் தலைவர் பி.எஸ்.செளகான் அவர்கள்மக்களுடைய கருத்து கேட்புக்கு பின்,


பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு பொருந்தாது என்றும், பல்வேறு மொழி பேசக்கூடிய இனக்குழுக்கள், அந்த இனக்குழுக்களுக்கிடையே பல்வேறு கலாச்சாரங்கள் பின் பற்றப்படுகின்றன. அதே போல பல்வேறு மதங்களை கடைப்பிடிப்போரும் உள்ளனர்.ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் இருக்கும் போது எப்படி பொது சிவில் சட்டம் சாத்தியமாகும்?” என கேள்வி எழுப்பினார்.


அப்போது பொது சிவில் சட்டத்தை கிடப்பில் போட்டது  பாஜக அரசு.


இப்போது வரும் 2024 தேர்தலையொட்டி மீண்டும் பொது சிவில் சட்டத்தை தூசி தட்டி எடுத்து சமூகப்பதற்றத்தை உருவாக்க முனைகிறது சங்பரிவாரக்கும்பல். இந்திய தலைமை அமைச்சர் திரு.மோடி மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்ட அறிவிப்பு செய்தவுடன், முதலில் இசுலாமியர்களிடமிருந்தே எதிர்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்த சூழலில்,வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பாஜகவிடமிருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


தேசிய மக்கள் கட்சித்தலைவரும் மேகலாய முதல்வருமான திரு.கான்ராட் கே.சிங்மா பொது சிவில் சட்டத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எச்சரித்துள்ளார்.


பாஜக கூட்டணி ஆதரவோடு தான் சங்மா முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதே போல மேகலாயா பழங்குடி கவுன்சில் அமைப்பும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.


இந்த அமைப்பில் உள்ளோர் இந்துக்கள் என்பது குறிப்பான செய்தியாகும்.


உச்சகட்டமாக,


மிசோரம் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கடந்த பிப்ரவரி 14,2023 அன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஆளும் மிசோ தேசிய முன்னணி அரசு.



மிசோ மக்களின் பிரதிநிதியாகவும் முதல்வராகவும் உள்ள திரு.சொரம்தாங்கா கூறும் போது,


பொது சிவில் சட்டம் எமது மிசோ தேசிய இனத்தின் அடையாளங்களை சிதைத்து விடும்என கவலை தெரிவித்துள்ளார்.


அதே போல நாகாலாந்து மக்களும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து போராடுவோம் என அறிவித்துள்ளனர்.


1963 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலம் உருவாக்கப்பட்ட போது, நாகாக்களின் சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்தில் கூடுதல் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தால் அந்த சிறப்புரிமை பறிபோகும் எனஅச்சப்படுகிறது நாகா சோசலிச கவுன்சில்.


சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்களும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்.


ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி சமன்வாய் சமிதி (ASS) ஒரு ஆலோசனைக்கூட்டம் போட்டு,


பொது சிவில் சட்டத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.


ஆதிவாசி ஜன் பரிசத் தலைவர் பிரேம் சாஹி முண்டா கூடுதலாக,


இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கடும் விளைவுகளை பாஜக சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.

 

ஆக, பன்மைத்துவ கலசாரத்தையும் இனங்களையும் மதங்களையும் கொண்டுள்ள இந்தியாவில், முஸ்லிம்களை மட்டுமின்றி, மதவெறியர்கள் என்றும் அவர்கள் பொது சட்டங்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மட்டார்கள் என்றும். இந்து மக்களில் விரோதிகள் என்றும்  சித்திரித்து அவர்களை தனிமைப்படுத்தி, ஒடுக்கி. அதன் மூலம்  ஒரு சமூகத்தினரையும் வன்முறையில் இறங்கச் செய்யும்  ஒரே நோக்கத்துடனும் வெறுப்பு அரசியல் மூலமும் இந்த்துக்களின் வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடனும் மோடி அரசாங்கம் கொண்டு வர உத்தேசிக்கும் இந்த பொது சிவில் சட்டத்தை முறியடிக்க ஜனநாயக, சிறுபான்மை மதத்தினரும், ஒடுக்கப்படும் தலித்துகளும் பழங்குடி மக்களும் ஒன்றிணௌட வேண்டும்,.

 

- வன்னி அரசு