22 March 2024

அக்யுஸ்ட் பாஜக அஸ்வதாமனின் குற்றப்பின்னணி கதை

திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அ.அஸ்வதாமன் (எ) அக்யுஸ்ட் அஸ்வதாமனின் குற்றப் பின்னணி குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னரே எனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் வெளியிட்டேன். பலரும் ஊடக விவாதங்களில் இந்த வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பியதும், அதன் பின்னர் ஊடக விவாதங்களுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டான் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.



இன்று பாஜக வன்முறை கும்பல் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளான். தலித் பெண்கள் மீதும், குறிப்பாக தனது மனைவிடம் கூட வன்முறையை பிரயோகிக்கும் இந்த நபரின் குற்றப்பின்னணியை விரிவாக பார்ப்போம். 


வழக்கு எண் 1:


கடந்த 14.2.2016 அன்று தனது மனைவி துர்கா மற்றும் எட்டு மாத குழந்தையை, அவரது மாமனார் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால், அவர்களை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார் அக்யுஸ்ட் அஸ்வதாமன்.




22.03.2016 அன்று இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருகிறது. அரசு வழக்கறிஞர் ஒரு புதிய தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார். அதாவது அக்யுஸ்ட் அஸ்வதாமனின் மனைவியை யாரும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை. அஸ்வதாமன் மீது அவரது மனைவி கொடுத்த வரதட்சனை புகார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தன்னை வரதட்சனை கேட்டு அடித்து துன்புறுத்தும் நிலையில் விவாகரத்து வழக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வதாமன் வரதட்சணை வழக்கு நகல் 1
அஸ்வதாமன் வரதட்சணை வழக்கு நகல் 2


இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் முழுக்க முழுக்க குடும்ப பிரச்சனை. இதில் ஆட்கொணர்வு மனுவைக் கொண்டு தீர்வு சொல்ல முடியாது என்று சொல்லி அக்யூஸ்டு அஸ்வதாமனின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

எட்டு மாத கைக்குழந்தையுடன் இருந்த தனது மனைவியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, அடித்து விரட்டியவர் தான் இந்த அக்யுஸ்ட் அஸ்வதாமன்.



வழக்கு எண் 2:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுத்தூர்பேட்டை தாலுகா, மதியனூர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன்தனபாக்கியம் தம்பதியினர். இவர்கள் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய மகன் சிவானந்தனை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க விரும்பி, அக்யுஸ்ட் அஸ்வதாமன், அவரது தந்தை அல்லிமுத்து நடத்தும் அருள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு செல்கின்றனர். 13.6.2007 அன்று 70 ஆயிரம் பணத்தை கட்டி மகனை சேர்க்கின்றனர்.


A1 அல்லிமுத்து - A2 அஸ்வதாமன்


அக்யுஸ்ட் அஸ்வதாமனும் வரது தந்தையும் நடத்தும் அந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லை என்பதும், சரியான அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதும் பின்னர் தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கட்டிய பணத்தையும் மாறுதல் சான்றிதழையும் தருமாறு மாணவனின் தாயார் தனபாக்கியம், நிறுவனத்தை அணுகினார்.


அவர்கள் நீண்ட காலம் இழுத்தடித்து 4.1.2008 அன்று தருவதாக தனபாக்கியத்தை வரச்சொல்கின்றனர். அலுவலகத்தில் அஸ்வதாமனும், அவனது தந்தை அல்லிமுத்துவும் இருந்துள்ளனர்


உள்ளே சென்ற தனபாக்கியத்தின் சேலையை பிடித்து இழுத்த அல்லிமுத்து, பறத் தேவிடியா, பணத்த கொடுக்குறதுக்கு உங்கள வரச் சொல்லலடி, உங்கள ஒழித்துக்கட்ட தான் வரச்சொன்னோம் என்று இழிவாக பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். இப்படி பணம் கேட்டு வந்தால் உயிரோடு விடமாட்டேன் என்று அத்துமீறிய அல்லிமுத்து குறித்து புகார் சொல்வேன் என்று தனபாக்கியம் போராடியுள்ளார். அப்போது அறையில் இருந்த அஸ்வதாமன், உங்கள உயிரோடு விட்டாதாண்டி போலீஸ்ல புகார் கொடுப்பீங்கஎன்று சொல்லி, இரும்பு சுத்தியலை எடுத்து தனபாக்கியத்தை கொலை செய்யும் நோக்கத்தில் தலையில் ஓங்கி அடித்துஒழிந்து போடிஎன்றார்


இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. தனபாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்தவர்கள் அவரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர்.


இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் குற்ற எண்: 12/2008 பதியப்பட்டது. உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு (PRC No.6 of 2009) வந்தது.


இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) அல்லிமுத்துவும், இரண்டாம் குற்றவாளியாக (A2) அஸ்வதாமனும் உள்ளனர். அல்லிமுத்து மீது ... 294, 323, 506(2) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. அஸ்வதாமன் மீது ... பிரிவு 307படி கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கை நடத்தாமல் தாமதப்படுத்தி வந்தான் அக்யுஸ்ட் அஸ்வதாமன். மேலும், தான் பாஜகவில் இருப்பதாகவும், தன் மீதான வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று தனபாக்கியம் குடும்பத்தினரை ரவுடி கும்பலை வைத்து மிரட்டி வந்தான்.


தங்கள் உயிருக்கு அஞ்சிய தனபாக்கியம் குடும்பத்தினர், தலித்துகளின் பாதுகாவலராக அன்று வலம் வந்த மாநில தலைவர் முருகனுக்கு கடிதம் எழுதினர். கல் உடைக்கும் தனது தந்தை வழி ஒட்டர் சாதி ஆட்கள் மூலம், சுத்தியலை வைத்தே அடித்து கொன்றுவிடுவேன் என்றும், தனது அம்மா வழி வன்னியர் சாதி ஆட்களிடம் சொன்னால் சும்மாவிடமாட்டார்கள் என்றும் அக்யுஸ்ட் அஸ்வதாமன் மிரட்டுவதாக அக்கடிதத்தில் சொல்லியுள்ளார் தனபாக்கியம்.


பாஜக தலைவர் முருகனுக்கு தனபாக்கியம் அனுப்பிய கடிதம் ப.1

பாஜக தலைவர் முருகனுக்கு தனபாக்கியம் அனுப்பிய கடிதம் ப.2


அப்போது பாஜக தலைவர் வேல் யாத்திரையில் பிஸியாக இருந்ததால், தனபாக்கியத்தின் அழுகுரல் அவரிடம் எடுபடவில்லை.


இந்த வழக்கை மேலும் தாமதப்படுத்தும் நோக்கில், தங்கள் மீதான வழக்கு ரத்து செய்யும்படி 2015ஆம் ஆண்டு A1 அல்லிமுத்துவும்,  A2 அஸ்வதாமனும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுகின்றனர்.


வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், 25.01.2022ஆம் ஆண்டு கீழ்கண்ட தீர்ப்பை வழங்குகிறார்.


”இருதரப்பு வாதங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நமக்கு தெரிய வருவது என்னவென்றால், புகார்தாரரான பெண்ணையும் அவரது தாயையும் தங்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் A1 அல்லிமுத்து  ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தி சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது A2 அஸ்வதாமன் இரும்பு கம்பியை கொண்டு அப்பெண்களை தாக்கி காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டை புகார்தாரரின் தாயும், மேலும் 3 தனித்தனி சாட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன” 

அக்யுஸ்டுகள் தந்தை - மகன் மீதான வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீதான வழக்கு விவரம் 1

அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீதான வழக்கு விவரம் 2

அக்யுஸ்ட் அஸ்வதாமன் மீது குற்ற முகாந்திரம் உள்ளது - உயர்நீதிமன்றம்



இன்றும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் A1 அல்லிமுத்து - A2 அஸ்வதாமன் மீதான வன்கொடுமை வழக்கு நடைபெற்று வருகிறது.



இந்த குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளரை நிறுத்தி தான் பெண்களையும் தலித்துகளையும் பாதுகாப்போம் என்று வேடமிட்டு வருகிறது பாஜக கும்பல்.














02 October 2023

ஜனநாயகத்தின் தாய் நாடா இந்தியா?

தில்லியில் கடந்த செப். 9ஆம் தேதி நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முதல் அமர்வில் பேசிய பிரதமர் மோடி, ‘ஜனநாயகத்தின் தாய்நாடாக இந்தியா விளங்குவதால், பன்னெடுங்காலமாக பேச்சுவார்த்தை மற்றும் ஜனநாயக விழுமியங்களில் எங்களது நம்பிக்கை மாறாமல் உள்ளது. உலகம் ஒரு குடும்பம் என்று பொருள் கொண்ட வசுதைவ குடும்பகம் என்பதே எங்கள் சர்வதேச பார்வையின் அடித்தளமாக விளங்குகிறது’ என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

ஜி20-ன் போது சேரிகளை மறைத்த ஜனநாயகத்தின் தாய்நாடு 

கடந்த ஒரு வார காலமாக வெளிவரும் செய்திகள் பாஜக கும்பல் கட்டமைக்க முயன்ற போலி பிம்பத்தை சுக்குநூறாக உடைத்துள்ளது கனடா தேசம். டெல்லியில் ஜி20 மாநாட்டை முடித்த கையோடு கனடா பாராளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டார்.

கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரத்தில் அமைந்துள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக இருந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார் என்பவர், அந்த சீக்கிய கோவிலின் வாகனம் நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


நிஜ்ஜாரின் படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டிருப்பதாக கனடா நம்புவதாவும், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிவித்தார் ட்ரூடோ. கனடா மண்ணில் கனடிய குடிமகன் ஒருவர் அந்நிய நாட்டின் அரசால் கொல்லப்படுவது என்பது கனடாவின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்று பிரகடனம் செய்தது கனடா பாராளுமன்றம்.

இதனையொட்டி, கனடாவுக்கான இந்திய தூதரகத்திலிருந்து முக்கிய அதிகாரியை வெளியேற்றியது கனடா. இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை, அதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றியும், கனடிய குடிமக்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.


யார் இந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்?


ஹர்தீப்சிங் நிஜ்ஜார்
இந்தியவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட நிஜ்ஜார் கடந்த 1996ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டேன் என்ற வாதத்தை முன்வைத்து அகதி குடியுரிமை கோரிய நிஜ்ஜாரின் மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், இந்தியாவில் சீக்கியர்களின் நிலை, நெருக்கடி இவற்றை தெளிவுபடுத்தி கனடா நாட்டில் அகதியாக குடியேறினார்.

ஆனால், நிஜ்ஜார் குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்குறிப்பில், தொடக்கத்தில் பாபர் கல்சா இண்டர்நேஷ்னல் என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டவர், பாகிஸ்தானில் ஆயுத பயிற்சியும் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. பின்னாட்களில், ’காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் இந்திய அரசின் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளன. மேலும், 2020ஆம் ஆண்டு ஹர்தீப்சிங் நிஜ்ஜாரை ’ஊபா’ சட்டத்தின் கீழ் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தது இந்திய அரசு. கடந்த சில ஆண்டுகளாக அயலகத்தில் வாழும் சீக்கியர்கள் மத்தியில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்தும் செயல்பாட்டிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

சில கூலிப்படையினரால் கொல்லப்படும் ஆபத்து உள்ளது என்று நிஜ்ஜாருக்கு கனடிய உளவுத்துறை முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே வான்கூவரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு, இந்த கொலையை இந்திய அரசு தான் செய்தது என்று குற்றஞ்சாட்டி சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், பல ஆண்டுகளாக கனடிய சீக்கிய செயற்பாட்டாளர்கள் வெளிபடுத்தி வந்த அச்சம் தற்போது உண்மையாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாசுதைவ குடும்பகம் என்று டெல்லியில் மோடி பாடம் எடுத்துக்கொண்டிருந்த போதே, ஜி20 பின்னணியில் நடைபெற்ற சந்திப்பில் நிஜ்ஜாரின் படுகொலையில் இந்திய அரசின் தொடர்பு குறித்து நேரடியாக மோடியிடம் கேள்வியெழுப்பி உள்ளார் ஜஸ்டின் ட்ரூடே. இதற்கு பல மாதங்கள் முன்பாகவே படுகொலை குறித்து இந்திய அரசுடன் நேரடியாகவே விவாதித்ததாக இப்போது தகவல் வந்துள்ளது.

நிஜ்ஜார் படுகொலை செய்தி அடங்குவதற்குள், கனடாவில் செயல்பட்டு வந்த மற்றொரு காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தூல் சிங் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதல் என்று சொல்லப்பட்டாலும், 2015ஆம் ஆண்டு முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னாய் என்ற பயங்கரவாதியின் குழுவினர் இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் தன்னை தீவிரவாதி என்று அழைக்க வேண்டாம் என்றும், தாம் தாய்நாட்டை நேசிப்பதாகவும், பாரத நாட்டுக்காக வாழ்ந்து இறப்பதே தனது நோக்கம் என்று என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு செய்திருந்தான் லாரன்ஸ் பிஷ்னாய். இவனையும் பாஜக ஆதரவு கும்பல் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறது.



சீக்கியர்களை கண்டு பாஜக அஞ்சுவது ஏன்?


காஷ்மீர் தொடங்கி தமிழ்நாடு வரை பல்வேறு தேசிய இனங்களின் தனித்த மொழி, பண்பாடு, நம்பிக்கை ஆகியவற்றை ஒடுக்கி, பாரதம் என்ற பெயரில் சனாதனத்தின் அடிப்படையிலான நாட்டை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார் கும்பல். அதனை செயல்படுத்தி வருவது மோடி தலைமையிலான பாசிச பாஜக கும்பல். இந்த நோக்கத்துக்கு தெற்கே தமிழர்கள் போல, வடக்கே எதிர்த்து நிற்பது சீக்கிய தேசிய இனம் தான்.

வீரஞ்செறிந்த போராட்டத்தின் வழியே வந்த பல்வேறு குருக்களால் கட்டமைக்கப்பட்ட சீக்கிய சமயம் என்பது மனிதகுலத்துக்கு எதிரான சனாதன கோட்பாட்டுக்கு வெளியே உள்ளது. சீக்கியர்கள் எப்போதும் தங்களை இந்துக்கள் அல்லாத தனித்த இனமாகவே கருதி வந்துள்ளனர். மேலும், இன்றளவும் போர்க்குணமுள்ள இனமாக தங்களை பாவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.


இந்தியாவில் காலிஸ்தான் கோரிக்கை இந்திரா காந்தி அரசால் ஒடுக்கப்பட்ட பின்பு, இந்திய ஒன்றிய அரசால் சீக்கிய அரசியல் கைதிகள் இன்றளவும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எல்லை மாநிலத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் சீக்கிய இளைஞர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருட்களின் பயன்பாடு திட்டமிட்டு அதிகரித்துள்ளதாகவும், வீரியமிக்க தங்கள் இளைஞர்களை குறிவைத்து போதை பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக சீக்கிய செய்ற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளனர். இதன் அடுத்த கட்டமாக, சீக்கியர்களின் வலுவான விவசாய பொருளாதாரத்தின் பின்னணியில் அமைந்துள்ள பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை குறிவைத்தே 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு.

தில்லி ஆட்சியாளர்களை பணியவைத்த சீக்கிய படை

வேளாண் சட்டத்தில் ஒரு புள்ளியை கூட மாற்ற முடியாது என்று சவடால் பேசியது பாசிச பாஜக அரசு. ஆனால் தில்லியை ஒரு வருட காலம் முற்றுகையிட்டு, தங்களது தீரமிக்க போராட்டத்தால் சட்டங்களை திரும்பப்பெறச் செய்தனர் விவசாயிகள். இதன் முழு பெருமையும் சீக்கிய விவசாயிகளையே சாரும். போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று அவதூறு பிரச்சாரம் செய்தது பாஜக அரசு. இது இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சதி என்று கண்ணீர் வடித்தது மோடியின் ஊடக கும்பல். எவராலும் வீழத்த முடியாத சாணக்கியன் என்று சொல்லப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகள் போராட்டத்தின் முன் மண்டியிட்டார்.


வரலாறு முழுக்க தங்கள் மீதான அந்நிய ஆதிக்கத்தை முறியடித்தே வந்துள்ளனர் சீக்கியர்கள். தங்கள் சமய நம்பிக்கைகளை சனாதன கோட்பாடு உள்வாங்க நடைபெறும் முயற்சிகளை இப்போதும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்தியாவில் பன்னெடுங்காலமாக நடைபெறுவது பவுத்தத்துக்கும் சனாதனத்துக்கும் இடையேயான போர் என்பார் புரட்சியாளர் அம்பேத்கர்.

வரலாற்று பார்வையோடு சமீபத்திய சம்பவங்களை அணுகினால், நடப்பவை என்ன்வென்று நாம் அறிந்துகொள்ளலாம். கனடாவின் குற்றச்சாட்டை ஒன்றிய பாஜக அரசு திட்டவட்டமாக மறுத்தாலும், மறுபக்கம் எக்ஸ், வாட்சப் உள்ளிட்ட தளங்களில் நிஜ்ஜாரின் படுகொலையை மோடியின் அரசு செய்தது என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்தியாவுக்கு பாடமெடுத்த அமெரிக்கா!


ஜி20 மாநாட்டுக்காக இந்திய வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் இருந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்களை சந்திக்கவே இல்லை. மோடி - பைடன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்தது 56 இன்ச் மார்பளவு கொண்டவரின் அரசு. ஆனால் இந்தியாவிலிருந்து நேரடியாக கம்யூனிச நாடான வியட்நாம் சென்ற அமெரிக்க அதிபர் பைடன், அங்கு ஊடகவியலாளர்களை சுதந்திரமாக சந்தித்தார். அப்போது அவர், ‘இந்திய பயணத்தின் போது மனித உரிமைகளை மதிப்பது குறித்தும், வலிமையான, வளமான நாட்டுக்கு சுதந்திரமான ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.


ஜனநாயகத்தின் தாய்நாடு என்று ஜி20ல் வாயளந்தார் மோடி. ஆனால் கம்யூனிச நாட்டில் நின்றுக்கொண்டு, இந்தியாவில் மோடிக்கு பாடமெடுத்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பைடன்.


கனடாவுக்கு ஆதாரங்களை அளித்தது யார்?


அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகள், தங்களுக்கிடையே பரஸ்பர உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பை கொண்டுள்ளன. இதற்கு ‘ஃபைவ் ஐஸ் உளவு கூட்டமைப்பு’ (Five Eyes Intelligence Alliance) என்று பெயர். 


நிஜ்ஜாரின் படுகொலை குறித்த முக்கிய ஆதாரங்களை இந்த உளவு கூட்டமைப்பை சேர்ந்த ஒரு நாட்டிடம் இருந்து தான் கனடா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது பெரும்பாலும் அமெரிக்கா அல்லது பிரிட்டனாக இருக்கக்கூடும். நிஜ்ஜார் கொலை குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியாவில் உள்ள அதிகாரிகளுடன் பேசிய உரையாடல்களும் அதில் அடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.


ஜெய்சங்கரின் அமெரிக்க பயணம்


இந்தியா - கனடா மோதல் பின்னணியில் கடந்த வாரம் அமெரிக்கா சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். அங்கு செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு. வேறு எவரிடமிருந்தும் கருத்துரிமை குறித்து எங்களுக்கு எந்த பாடமும் தேவை இல்லை’ என்றார்.

சர்வதேச ஊடக சுதந்திர குறியீட்டில் (Press Freedom Index) மொத்தமுள்ள 180 நாடுகளில் 2022ஆம் ஆண்டும் 150வது இடத்தில் இருந்த இந்தியா, 2023ஆம் ஆண்டு 161வது இடத்துக்கு இன்னும் கீழே தள்ளப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளாக ஊடகவியலாளர் கேள்விகளை எதிர்கொள்ள பயப்படும் பிரதமர், காஷ்மீரின் மயான அமைதியை செய்தியாக்கியதால் சிறையில் வாடும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள், வெளிநாட்டு மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும் ஊடகவியலாளர்கள் என இந்தியாவின் ஊடக சுதந்திரம் உலக அரங்கில் பல்லிளிக்கிறது.



மேலும் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், ‘இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா என்று சவால்விடுகிறேன்’ என்றார்.

கடந்த வாரம் தான் இந்திய பாராளுமன்றத்தில் டேனிஷ் அலி என்ற இஸ்லாமிய எம்பி குறித்து அச்சில் ஏற்ற முடியாத வசை சொற்களை பேசியது பாஜகவின் எம்பி. ரமேஷ் பிதூரி என்பதும், அவருக்கு எதிராக நடவிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக பிதூரியை பாஜக நியமித்துள்ளதையும் ஜெய்சங்கர் வசதியாக மறந்துவிட்டார் போல.

பாஜக மூத்த தலைவர்கள் ஆர்ப்பரிக்க வெறுப்பை கக்கிய பிதூரி

நிஜ்ஜார் படுகொலை மற்றும் கனடாவின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அரசின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘கனடாவின் குற்றச்சாட்டை மிகத்தீவிரமானதாக அமெரிக்க அரசு கருதுகிறது. கனடாவின் விசாரணை முழுமை பெற்று, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவுக்கு சிறப்பு சலுகை எதுவும் தரப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும் கனடாவின் விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

ஏற்கனவே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் எல்லைகளை ஆக்கிரமித்து சாலைகளையும், கிராமங்களையும் சீனா அமைத்து வருவதை எதிர்க்க முடியாமல், சீனா என்ற பெயரையே உச்சரிக்க பயந்து வாய்மூடி அமைதி காத்து வரும் பிரதமர் மோடி, அமெரிக்கா குறித்து மட்டும் வாய் திறப்பாரா என்ன?



அதுவும் அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், குடியரசு தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மோடி அழைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க பொதுத்தேர்தலின் போது அங்கு சென்று டிரம்புக்கு வாக்கு கேட்டவர் தானே மோடி?

மோடியின் விஸ்வகுரு எனும் வெற்று விளம்பரத்துக்கு இன்னும் என்ன விலை கொடுக்கப் போகிறதோ இந்தியா?

வன்னி அரசு.