03 February 2011

கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன?


கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? கருத்துத் திணிப்பு வன்முறையாளர்களுக்கு பதிலடி!
- வன்னிஅரசு

""உயரிய நோக்கத்திற்காக பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை துரோகிகளும் எதிரிகளும் திசைமாற்ற நினைப்பார்கள். அவற்றையயல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இலக்கை அடைய முடியும்!''
மேதகு பிரபாகரனின் இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் பயணித்துக்கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழ்த்தேசம் படைக்க தமிழ்நாட்டில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளாய் களமாடிக் கொண்டிருக்கிறோம்.






காலம் காலமாய் கட்டிக்காத்து வந்த சாதியவாதிகளின் ஆதிக்கத்தை உடைத்து ஒடுக்கப்பட்ட அனைவரையும் அரசியல் அதிகாரத்தின் அருகில் அழைத்து வந்துகொண்டிருக்கிறார் "எழுச்சித்தமிழர்' தொல். திருமாவளவன் அவர்கள். அதேபோல் தமிழ், தமிழ்த்தேசியம், மேதகு பிரபாகரன் என்கிற விடுதலைச் சொற்கள் சேரிகளிலும் குப்பங்களிலும் இன்றைக்கு உச்சரிக்கப்படுகிறதென்றால் அதற்குக் காரணம் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்தான். 





இன்றைக்கு தமிழ்த்தேசிய எழுச்சி தமிழகத்தில் நெருப்பாய் அனலடிக்கிறது என்றால் அதற்குக் காரணமாகநேர்மையான தமிழ்த்தேசியவாதிகளின் விரல் விடுதலைச் சிறுத்தைகளைத்தான் சுட்டிக்காட்டும். அந்தளவிற்கு திராவிட அரசியலுக்கு மாற்றான ஆற்றலாய் வளர்ந்து வருகிற விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணிகள் வெகுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிற சூழலில், விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சியை வளர்ச்சியைப் பிடிக்காத சில "நச்சுவாதிகள்' சிறுத்தைகளுக்கெதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.


ஈழத் தமிழர்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்துவிட்டதாக அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றனர்.


ஈழ விடுதலை அரசியலில் கடந்த கால் நூற்றாண்டாய் களமாடி வருபவர் எழுச்சித் தமிழர். தேசிய இன விடுதலை குறித்த, மார்க்சிய, பெரியாரிய, கருத்தியலோடு தமிழகத்தில், இந்திய அளவிலேயே உருவான முதல் அம்பேத்கர் இயக்கம் என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். அம்பேத்கர் இயக்கமென்றால், தமிழகத்தில் திராவிட பொதுவுடைமைக் கட்சிகளுக்கு கொடிகட்டவும், போஸ்டர் ஒட்டவும், கூட்டம் சேர்க்கவும்தான் என்கிற நிலையை மாற்றி "அதிகாரப் பகிர்வு' என்கிற அளவில் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான்.


தலித்துகளும் தமிழர்கள்தான் என்று பொதுஅரங்கில் தலைநிமிர்வை உருவாக்கியவர் எழுச்சித்தமிழர்தான். இதைப் பொறுக்க முடியாத தமிழ்த் தேசிய முலாம் பூசிக்கொண்டு திரியும் சாதியவாதிகள் ஆற்றாமையால் வாய்க்கு வந்ததைப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.


அந்த வரிசையில் தற்போது, "மீனகம்' என்கிற இணையத் தளத்தில் இராவணன் என்கிற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் மக்கள் விரோதி, கீழ்க்கண்ட அவதூறுகளை கூச்சநாச்சமில்லாமல் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.




1. முத்துக்குமார் மூலம் தமிழகத்தில் எழவிருந்த எழுச்சியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தடுத்துவிட்டார்.


2. தி.மு.க.வின் தலைவர் சொல்லித்தான் இப்படிச் செய்துவிட்டார்.


3. முத்துக்குமாரின் உடலை அவரது சொந்த ஊரான கொழுவை நல்லூருக்குப் போகவிடாமல் திருமாவளவன் தடுத்துவிட்டார்.


4. புரசைவாக்கம் கடைவீதி வழியாகச் செல்லத் தடை விதித்தார்.


5. கல்லூரிகளும் விடுதிகளும் காலவரையற்ற வகையில் மூட தி.மு.க. அரசு உத்தரவிட்ட நிலையில் மாணவர்கள் முத்துக்குமார் உடலை ரோட்டில் போட்டு மறியல் செய்தபோது வன்னி அரசு மூலம் ரவுடித்தனம் செய்து உடலை அடக்கம் செய்தது.


இப்படிப் போகிறது அந்த நபரின் அவதூறு குற்றச்சாட்டுகள். இதற்குப் பதில் கூறும் முகமாக இக்கட்டுரையை எழுதவில்லை. முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து சனவரி 29 வியாழன் காலை முதல் சனவரி 31 சனி நள்ளிரவில் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்படும் வரை உடனிருந்தவன் என்கிற முறையில், நடந்தது என்ன என்பதைச் சொல்லும் விதமாகத்தான் எழுதுகிறேன். அதுமட்டுமல்ல, முத்துக்குமார் எனது நண்பர். விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல்தான் தமிழர் விடுதலைக்கான அரசியல் என்று முழுமையாக நம்பியவர். இக்கருத்தை அநேகமுறை என்னிடம் கூறியவர். எழுச்சித் தமிழர் மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டத்தில் நான்கு நாட்களும் மறைமலைநகர் திடலில்,""அண்ணன் ஏன் சாகவேண்டும்? நான் சாகிறேன்'' என்று கூறிக்கொண்டு மிகுந்த மனஉளைச்சலில் இருந்தவர்.


சாகும் தறுவாயில், ""பிரபாகரனிடமும் திருமாவளவனிடமும் என் சாவைச் சொல்லுங்கள்!'' என்று சொல்லிச் செத்தவர்.


அத்தகைய முத்துக்குமார் சாவின் மூலம் எழவிருந்த எழுச்சியை எழுச்சித் தமிழர் தடுத்தார் என்று சொல்வது, வேடிக்கையிலும் வேடிக்கை. இது முத்துக்குமாரின் ஈகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.


கரும்புலி முத்துக்குமாரின் உடலை எங்கு வைக்க வேண்டும் என்பதை முழுக்க முழுக்க முடிவு செய்தது இயக்குநர் புகழேந்திதான். வணிகர் சங்கத் தலைவர் திரு. த. வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதல்படி தோழர் புகழேந்திதான் இதை நெறிப்படுத்தினார். மருத்துவமனையில் தோழர் புகழேந்தியுடன் முழுக்க முழுக்க நான் இருந்தேன். அப்போது காவல்துறையின் உதவி ஆணையர் திரு. சாரங்கன் "முத்துக்குமாரை தமிழ்த் தீவிரவாதி' என்று சொன்னபோது காவல்துறையை எதிர்த்துக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது விடுதலைச் சிறுத்தைகள்தான். அதன்பின் ம.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ஜோயல் அவர்களின் தலைமையில் வழக்கறிஞர்கள் வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.




பின்னர் முத்துக்குமாரின் வித்துடல் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்டு கொளத்தூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


மறுநாள் காலை 10 மணிக்கு கொளத்தூரில் உள்ள வணிகர் சங்கக் கட்டடத்தில் தலைவர்கள் வைகோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, இராமதாசு, எழுச்சித் தமிழர், த. வெள்ளையன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.
அப்போது வெள்ளையன் அவர்கள், முத்துக்குமாரின் வித்துடலை கொழுவைநல்லூருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், அன்றைய கொந்தளிப்பான சூழலைக் கணக்கிட்டு, அதனை வேண்டாம் என்று வாதிட்டவர் மருத்துவர் இராமதாசு அவர்களும், தா. பாண்டியன் அவர்களும்தான்.


இறுதியில் மூத்த அரசியல் தலைவர்களின் கருத்துகளே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அண்ணன் வெள்ளையன் எவ்வளவோ கெஞ்சியும் அவரது குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. அடுத்து சென்னையில் எங்கு எரியூட்டுவது என்கிற விவாதம் எழுந்தபோது, கொளத்தூரில் உள்ள சுடுகாட்டில்தான் எரியூட்ட வேண்டும் என்று சொன்னவர்கள் அதே மூத்த அரசியல் தலைவர்கள்தான். ஆனால் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர்தான், ""முத்துக்குமார் உடலை மூலக்கொத்தளத்தில்தான் எரியூட்ட வேண்டும். அங்குதான் மொழிப்போர் ஈகியர் நினைவிடம் இருக்கிறது. ஆகவே, முத்துக்குமாரின் வித்துடல் அங்கு எரியூட்டப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும்'' என்று அக்கூட்டத்தில் பேசினார். ஆனால் மருத்துவர் இராமதாசு அவர்கள், ""கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் சுடுகாட்டின் தொலைவு அதிகமாக இருக்கிறது. கலவரம் எதுவும் வரலாம்'' என்று அச்சமூட்டினார்.




அதற்கு அண்ணன் வெள்ளையன் அவர்கள், ""கொழுவைநல்லூருக்குத்தான் கொண்டு போகவில்லை. மூலக்கொத்தளத்திற்காவது போவோம்'' என்று உருக்கமாக வேண்டினார்.




இறுதியில் மூலக்கொத்தளம் என்றே முடிவானது. சனி மாலை முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம்! அனைத்துத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இடையிடையே அந்த கொளத்தூர் சாலையில் பிரச்சனைகள் வந்தவண்ணம் இருந்தன.


திடீரென பிற்பகல் 3 மணியளவில் சிலர் ஊடகவியலாளர்களைத் தாக்க முயற்சிப்பதாக என்னிடம் சொன்னார்கள். "நக்கீரன்' பிரகாஷ், "ஜூனியர் விகடன்' பாரதி தமிழன், "குமுதம்' ஏகலைவன், "தமிழா தமிழா' பாண்டியன் ஆகியோரோடு பேசிக்கொண்டிருந்த நான் உடனடியாக பிரச்சனை நடந்த இடத்துக்குப் போனேன். அங்கு "டைம்ஸ் நவ்' செய்தியாளர் தன்யா ராஜேந்திரன் உள்ளிட்ட ஆங்கில ஊடகவியலாளர்களை சிலர் விரட்டிக் கொண்டிருந்தனர்.








"ஈழ விடுதலைக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் செய்திகள் ஒளிபரப்புவதாக' சொல்லித்தான் அவர்களை விரட்டினர். இந்த வேலையைச் செய்தது மாணவர்கள் அல்ல. மாணவர்கள் பெயரில் ரவுடித்தனம் செய்த சில பேர்வழிகள். நான், ஏகலைவன், தமிழா தமிழா பாண்டியன் ஆகியோர் சேர்ந்து ரவுடித்தனம் செய்தவர்களிடம் பேசி சமரசம் செய்தோம். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சனைகள் வந்தவண்ணமே இருந்தன. தி.மு.க. மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபுகூட இப்படித்தான் விரட்டப்பட்டார்.




இப்படியான சூழலில்தான் முத்துக்குமாரின் வித்துடலை எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடந்தன. தலைவர்கள் வீரவணக்க உரை நிகழ்த்தினர். புலிக்கொடி போர்த்தி முத்துக்குமார் உடல் சுமந்த வாகனம் நகர்ந்தது. அப்போது வண்டியில் ஏறிநின்ற இயக்குநர் அமீர் அவர்களின் காலைப் பிடித்துச் சிலர் கீழே இழுத்தனர்.
""மாணவர்கள் மட்டுமே ஏற வேண்டும். ஏனென்றால் மாணவர்களிடம்தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று முத்துக்குமாரின் மரண வாக்குமூலத்தில் இருக்கிறது'' என்று ஒருவர் கத்தினார். அவருக்கு ஏறக்குறைய 40 வயது இருக்கும். அவர் மாணவராம்! பின்னர் அமீர் இறங்கிவிட்டார். அப்போது மாலை 6 மணியாகிவிட்டது.




இந்நிலையில், நான் ஏற்கனவே அறிந்திருந்த சிலர், திடீரென மாணவர்கள் என்கிற போர்வையில், புரசைவாக்கம் கடைவீதிகள் வழியாகத்தான் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று வண்டியை மறித்துச் சாலை மறியல் செய்தனர்.


மாலை 4 மணியளவில் கொளத்தூர் தொடங்கிய ஊர்வலம் மூலக்கொத்தளம் இடுகாட்டைச் சென்றடைந்தபோது நள்ளிரவு 12 மணி. தலைவர்கள் பழ. நெடுமாறன், நல்லக்கண்ணு போன்றவர்கள் நடக்க முடியாமல் வாகனங்களில் வந்தனர். எமது தலைவர் எழுச்சித் தமிழரும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் கடைசிவரை நடந்து வந்தனர். புரசைவாக்கம் கடைவீதி வழியாகச் சென்றால் 5 மணி நேரம் கூடுதலாக நடக்க வேண்டியிருக்கும்.முத்துக்குமாரின் வித்துடல் விடியற்காலைதான் மூலக்கொத்தளம் போய்ச் சேரும். மேலும், வந்திருந்த பெண்களும் தோழர்களும் சோர்வடைய நேரும். ஆதலால்தான் எமது தலைவர் புரசைவாக்கம் பகுதிக்குள் போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.




மக்களுடைய சிரமங்களையும் கணக்கிலெடுப்பவர்தான் நல்ல தலைவராக முடியும். அந்த வகையில் மக்கள் தலைவரான எங்கள் தலைவர் அந்த நேரத்தில் அப்படி வேண்டுகோள் வைத்தார். புரசைவாக்கம் வீதிகள் வழியாக முத்துக்குமார் வித்துடலைக் கொண்டு சென்றால்தான் தமிழகத்தில் எழுச்சி ஏற்படுமா? அப்பகுதிகளில் மட்டும்தான் தமிழர்கள் வசிக்கிறார்களா?


கரும்புலி முத்துக்குமாரின் வித்துடலை போகவிடாமல் மறித்து நடுரோட்டில் போட்டால்தான் கல்லூரிகளும் விடுதிகளும் திறப்பார்கள் என்கிற மலிவான "பிளாக் மெயில்' அரசியலுக்காகவா கரும்புலி முத்துக்குமார் மாய்ந்தான்? அன்று முத்துக்குமாரின் வித்துடல் வாகனத்தை எந்தக் கல்லூரி மாணவர்கள் மறித்தார்கள்? குங்குமம் செய்தியாளராக இருக்கும் எனது நண்பர் தோழர் அருள் எழிலன் எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்? அவரும் சாலை மறியலில் உட்கார்ந்து இருந்தாரே!






தலைவர்கள் பழ. நெடுமாறன், வைகோ, த. வெள்ளையன், நல்லக்கண்ணு ஆகியோரோடு எங்கள் தலைவர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் காத்திருக்கின்றார். அப்போது ""யாரோ தகராறு செய்கிறார்கள். முத்துக்குமாரைச் சுமந்துவரும் வண்டி நடுரோட்டிலேயே நிற்கிறது'என்று சொன்னபோது, அண்ணன் வைகோ அவர்களும் எங்கள் தலைவரும் ஒரு சேர,""இது தவறானது. உடனே போய் வாகனத்தை இழுத்து வாருங்கள்'' என்று சொன்னபோது நானும் தோழர்களும் அங்கே போய் சொல்லிப்பார்த்தோம். யாரும் எழுவதாகத் தெரியவில்லை. இயக்குநர்கள் சேரன், ராம் ஆகியோர் கெஞ்சிப் பார்த்தார்கள். மறியலில் ஈடுபட்டோர் எழவில்லை. கல்லூரிகளைத் திறந்தால்தான் நாங்கள் எழுவோம்'' என்றார்கள்.




அப்போது நான், ""இப்படி நடுரோட்டில் உட்கார்ந்து அரசியல் பண்ணுவது சரியா? நாம் எல்லோருமே அமைதியாக முத்துக்குமாரை எரியூட்டிய பின், கோபாலபுரத்தையோ அறிவாலயத்தையோ முற்றுகையிடுவோம் அதற்கு நீங்கள் தயாரா?'' என்று கேட்டேன். ஆனால் யாரும் அதற்கு பதில் சொல்லாமல், ""கல்லூரிகளை உடனே திறந்தால்தான் நாங்கள் எழுந்திருப்போம்'' என்று மீண்டும் மீண்டும் கத்த அடம்பிடித்தனர்.




அரசு எந்திரத்தின் யதார்த்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அவர்களிடம் என்ன பேசி என்ன பயன்? ஆகவே, வண்டியை மறித்து நின்றவர்களை அப்புறப்படுத்தினேன். மூலக்கொத்தளத்தில் காத்திருந்த தலைவர்கள் வீரவணக்கம் செலுத்திய பின் முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்பட்டது. இதுதான் நடந்தது. ஆனால் அவதூறுகளைச் சாதாரணமாகப் பரப்புகிறார்கள்.




கரும்புலி முத்துக்குமாரின் வீரமரணம் எதைக் காட்டுகிறது? அவரது மரண சாசனத்தின் உள்ளடக்கம் என்ன? மரணிக்கும் தறுவாயில்,""பிரபாகரனிடத்திலும் திருமாவளவனிடத்திலும் சொல்லுங்கள் என்று சொன்னானே முத்துக்குமார், அதன் அர்த்தம் என்ன? எதுவுமே தெரியாமல் விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் குறிவைத்து அவதூறு நெருப்பைப் பற்ற வைக்கிறார்களே என்ன காரணம்?


நடந்ததை மறைத்து, வடிகட்டிய பொய்யைத் துணிச்சலாக எழுதுவதற்கான பின்னணி என்ன? இதைப் பற்றிச் சொல்லித்தான் தீர வேண்டும்.


இன்றைக்கு திராவிட அரசியலுக்கு மாற்றாய் வளர்த்தெடுக்கப்படுகிற அரசியல் தமிழ்த்தேசிய அரசியல்தான். இந்த அரசியலை முழுவீச்சாய் பரப்பி வருபவர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர்தான். ஊருக்கு வெளியே இருந்த சேரி மக்களை பொதுத்தளத்திற்குக் கொண்டு வந்ததோடு, பொதுத் தளத்திலும் அதிகாரப் பங்கீட்டு யுத்தம் நடத்தி வருபவரும் எங்கள் தலைவர்தான். அதிகார மையத்திலிருப்பவர்களுக்கு இவையயல்லாம் எரிச்சலாகத்தான் இருக்கும்.


கரும்புலி முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்படுவது தொடர்பாகவும் எங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் முடிவு செய்தது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்தான். இந்த இயக்கத்தில் எங்கள் தலைவர் மட்டுமல்லாமல் தா.பாண்டியன், வைகோ, நெடுமாறன், இராமதாசு ஆகியோரும் அங்கம் வகித்தார்கள். எங்கள் தலைவரின் முடிவாக எதுவுமே இல்லை.


எதனையும் எங்கள் தலைவரால் கருத்தாகத் தெரிவிக்க முடிந்ததே தவிர, முடிவாக எடுக்க முடியவில்லை. அதற்கு ஒரு உதாரணம், "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்று பெயர் வைப்பதற்கு முன், "ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்றுதான் வைக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் கூறினார். ஆனால், இராமதாசும், நெடுமாறனும் ""அப்படிப் பெயர்வைத்தால் கம்யூனிஸ்டுகள் வருவதற்கு யோசிப்பார்கள்!'' என்று கூறியதால் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' உருவானது. இதனை எத்தனை பேர் விமர்சனம் செய்தார்கள்.


எங்கள் தலைவர் மறைமலை நகரில் சாகும்வரை உண்ணாநிலை தொடங்கிய சனவரி 15ஆம் தேதி முதலே, விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் முழுக்க சாலை மறியல்களில் ஈடுபட்டு, 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்களே. அப்போது சிறுத்தைகளைத் தவிர யாராவது போராட்டத்தில் ஈடுபட்டார்களா? 


உண்ணாநிலைப் போராட்டத்தின் இறுதி நாளன்று எழுச்சித் தமிழர் பேசும்போது, தமிழகத்தில் ""காங்கிரசை புல்பூண்டு இல்லாமல் ஆக்குவோம் என்று பேசியதை, மறுநாள் இராமதாசு கண்டித்தாரே! இதற்காக அவரை யாரேனும் கண்டித்தார்களா?


முத்துக்குமார் வீரச்சாவைத் தழுவியபோது விடுதலைச் சிறுத்தைகள், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்று தமிழக அரசுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத் தமிழர் சிக்கலில், எங்கள் தலைவர் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசுக் கட்சிகளை நேர்மையாகவும் துணிவாகவும் விமர்சனம் செய்துதான் பேசினார்.


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் மற்ற தலைவர்கள், கலைஞரை மட்டுமே வசைபாடிக் கொண்டிருந்தது ஏன்? எல்லா தலைவர்களும் சேர்ந்து தங்கள் கோரிக்கைக்காக முதல்வர் கலைஞரைச் சந்தித்து நெருக்கடி கொடுத்திருக்கலாமே! அதை ஏன் செய்யவில்லை?


ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டக் களத்தில் சனவரி மாதம் மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் 316 பேர் சிறைப்படுத்தப்பட்டார்கள். சிறுத்தைகள் அல்லாத தமிழ்த் தேசியவாதிகள் எத்தனை பேர் இப்படிக் கொத்துக் கொத்தாய்ச் சிறைக்குப் போனார்கள்? பால்ரஸ் குண்டுகள் கடத்தலிலும், புலிகளுக்கு எரிபொருள் கடத்திய வழக்கிலும் சிறுத்தைகள் கைது என்று செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். அப்போதுகூட உங்களுக்கு நெஞ்சறுக்கவில்லையா? நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று. இப்படி எதையுமே செய்யாதவர்கள் ஆற்றாமையினால் பொய்யையும் புரட்டையும் பேசுவதும் எழுதுவதும் ஏன்?




ஈழத்தமிழர்களின் ஒரே நம்பிக்கை என்று சொல்லப்பட்ட "ஈழத் தாய்'ஜெயலலிதா, இப்போது காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தியைச் சந்தித்துப் பேசியது ஏன்?


கரும்புலி முத்துக்குமார் வீரச்சாவடைந்து ஓராண்டாகியுள்ளது. இப்போதுகூட ஒரு வீரவணக்க அஞ்சலி செலுத்த முன்வராத ஜெயலலிதாதான் ஈழத் தமிழர்களின் நம்பிக்கைத் தாயா? தேர்தல் அரசியலுக்காக யாரோ எழுதிக்கொடுத்த அறிக்கையை வெளியிட்டுத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா ஈழ ஆதரவாளரா? 25 ஆண்டுகள் ஈழ விடுதலைக்காகத் தன்னை ஒப்புவித்த எங்கள் தலைவர் துரோகியா? தேர்தல் முடிந்த மறுநாளிலிருந்து ஜெயலலிதா ஈழம் குறித்துப் பேசமாட்டார் என்று எங்கள் தலைவர் எழுச்சித் தமிழர் சொன்னது இன்று உண்மையாகவுள்ளது 
'"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றவர்கள். இப்போது என்ன சொல்லப் போகின்றனர்?



தேர்தல் அரசியலில் எந்தக் கூட்டணியில் இருப்பது என்பது அந்தந்தக் கட்சி சுயமாக முடிவெடுப்பது. இந்தக் கூட்டணியில்தான் இருக்க வேண்டும் என்பது கருத்தைத் திணிக்கும் ஆதிக்கவெறிப் போக்கு அல்லவா?


எந்தத் திணிப்பும் வன்முறையாகாதா? தலித்துகள் என்றால், ""சமூகத் தளத்தில் மட்டுமல்ல, அரசியல் தளத்திலும் நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்'' என்பது ஆதிக்க வெறியன்றி வேறென்ன?




இன்றைக்கு தமிழ்த் தேசியத் தளத்திற்குள் சில புல்லுருவிகள் நுழைந்து, தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க நினைக்கும் "இராவணன்' மாதிரி ஆட்கள், ஒரு முத்துக்குமார் மட்டுமல்ல, 19 போராளிகள் தீக்குளித்து வீரச்சாவை அடைந்தபோது என்ன புடுங்கினார்கள்? எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடாமல், எழுச்சியை முடக்கியதாகச் சிறுத்தைகள் தலைவர் மீது குற்றம் சுமத்திவிட்டு சினிமா தியேட்டர்களில் சுற்றுகிறார்களே,இதுதான் எழுச்சியா?



0 comments:

Post a Comment