21 February 2012

கம்யூனிசத்தை அவமதிக்கும் தோழர் தா.பாண்டியன்

thaa_pandian_360
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தோழர் ஜீவா அவர்களைப் பற்றி கேட்கக் கேட்க பிரமிப்பாக இருக்கும். அவ்வளவு நேர்மையான - தூய்மையான தலைவராக யாவராலும் மதிக்கப்படுபவராக இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல் அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் பாடமாக வாழ்ந்தவர் தோழர் ஜீவா.
1960ஆம் ஆண்டு கோவையில் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றிருக்கிறார் தோழர் ஜீவா. அவருடைய எழுச்சிகரமான உரைக்குப்பின், கோவை மாவட்டத்தின் சார்பில் ஜீவா அவர்களிடம் கட்சி வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவருடன் வந்த தோழர்கள் சிலர், “தோழர் சாப்பிடப் போகலாமா?” என்று கேட்கின்றனர். அதற்கு ஜீவா, “உங்களிடம் பணம் இருந்தால் சாப்பிடப் போகலாம்; என்னிடம் இல்லை” என்றிருக்கிறார். உடன் வந்த தோழர்களோ, “இதோ உங்களிடம்தான் இவ்வளவு பணம் இருக்கிறதே” என்று அவர் கையில் இருந்த மஞ்சள் பையைக் காட்டிக் கேட்டார்கள். அதற்கு, “இது என்னுடைய பணம் அல்ல; கட்சிப் பணம். இதை கட்சியில் ஒப்படைக்க வேண்டும்” என்று பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நடந்தே பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டார் ஜீவா. இப்போது அரசியல் வகுப்பெடுக்கும் தலைவர்கள் ஜீவாவின் நேர்மையைப் பற்றிச் சொல்லும்போது இச்சம்பவத்தை பெருமிதத்துடன் கூறுவார்கள்.
இதேபோல் 1962ஆம் ஆண்டு தாம்பரத்தில் உள்ள அவ்வையார் உயர்நிலைப் பள்ளியில் விழா ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர். தாம்பரம் வந்து இறங்கியபோதுதான் தமது உதவியாளர்களிடம் “ஜீவா இங்கேதானே இருக்கிறார். அவரை அழைத்தீர்களான்னேன்” என்றார். காங்கிரசிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா சேர்ந்திருந்ததால் காங்கிரஸ்காரர்கள் ஜீவாவுக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. உடனடியாக ஜீவா வீட்டுக்குச் சென்றார் பெருந்தலைவர். ஜீவாவின் துணைவியார் பத்மாவதி பெருந்தலைவரை வரவேற்றார். உள்ளே சென்ற பெருந்தலைவர் ஜீவாவைப் பார்த்து, “நிகழ்ச்சிக்கு வாங்கன்னேன்” என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு முன்கூட்டியே அழைப்பு விடுக்காததற்கு வருத்தமும் தெரிவித்தார்.
ஜீவாவோ “கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்: இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனவர் ஒரு மணி நேரமாகியும் வரவில்லை. என்னாச்சு என்று பெருந்தலைவர் போய் பார்த்தால் அரைக்கால் சட்டையோடு நின்றுகொண்டு வேட்டியை காயவைத்துக்கொண்டிருந்தார் ஜீவா. பெருந்தலைவருக்கு அப்போதுதான் புரிந்தது, ஜீவா அவர்களிடம் ஒரே ஒரு வேட்டியும் சட்டையும்தான் இருந்திருக்கிறது என்பது. பாதி காய்ந்தும் காயாத வேட்டியுடன் பெருந்தலைவருடன் பயணப்பட்டார் தோழர் ஜீவா அவர்கள்.
அத்தகைய நேர்மையுடனும் எளிமையுடனும் மக்களுக்குத் தொண்டாற்றி, தம் வாழ்வை அர்ப்பணித்து கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுத்தவர்தான் தோழர் ஜீவா. அப்படி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியில் இப்போது மீண்டும் மாநிலத் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் தோழர் தா.பாண்டியன் அவர்கள். தோழர் கல்யாணசுந்தரம் அவர்களுடன் சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தனியாக நடத்திவந்த தா.பா., கல்யாணசுந்தரம் அவர்களின் மறைவுக்குப் பிறகு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
திருச்சியில் நடைபெற்ற அந்த இணைப்பு விழாவை ஒருங்கிணைத்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளராக இருந்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள். பெயருக்கு ஏற்ற பெருமகனார். தோழர் ஜீவாவைப் போன்றே நேர்மையானவர், எளிமையானவர். தலித்துகள் விடுதலையிலும் சாதியப் பிரச்னைகளிலும் பெரும் அக்கறை கொண்டவர்.
“எங்களைப் பொறுத்தவரை சாதியக் கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும். சாதி உணர்வு என்பது வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்தாலும் அது ஒரு மாயை” என்று ‘போராட்டமே வாழ்க்கை’ என்கிற நேர்காணல் தொகுப்பில் ஊடகவியலாளர் திரு. மணாவிடம் உறுதிப்படுத்துகிறார். அதனால்தான் 2001ஆம் ஆண்டு தென் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் நல்லக்கண்ணு அவர்களின் மாமனார் படுகொலை செய்யப்பட்டபோதுகூட, அனைத்து சமுதாயத்தினரும் அமைதி காக்க அறிக்கைகள் மூலம் வேண்டுகோள் விடுத்தவர். அந்தளவுக்கு சமூக நல்லிணக்கம் விரும்புகிறவர்.
2001ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் திரு.வைகோ, திரு. பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் முன் முயற்சியில் சென்னை பாம்குரோவ் விடுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதுபெரும் தலைவர் அய்யா நல்லகண்ணு, தோழர் மகேந்திரன், தோழர் சுபவீ, விடுதலை ராசேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். ‘பொடா எதிர்ப்பு முன்னணி’ உருவானது. நல்லக்கண்ணு அவர்களை ஒருங்கிணைப்பாளராக தொல்.திருமாவளவன் முன்மொழிந்தார். ஆனால், பேரா.சுபவீ அவர்களோ திருமாவளவனும் ஒருங்கிணைப்பாளராக இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று சொல்லி இரு தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளராக அக்கூட்டத்திலேயே அறிவித்தனர். (அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் சுபவீ அவர்களும் பொடா சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்)
இப்படி முதுபெரும் தலைவரான அய்யா நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகளோடும் தலித் விடுதலை அரசியலோடும் தமிழகத்தில் பயணப்பட்டவர். கட்சி தமக்கு அளித்த வாகனத்தை கட்சிக்கே திருப்பி அளித்து ஜீவாவைப் போலவே வாழ்ந்து, முன்மாதிரித் தலைவராக தமிழகம் முழுக்க நடமாடி வருகிறார்.
இப்படி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியில்தான் தா.பா. அவர்கள் இப்போது தலைமை ஏற்றிருக்கிறார். நல்லது. அவருடைய பணிகள் சிறக்க விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகிறோம். கால தாமதமானாலும் வாழ்த்துவது எங்கள் கடமை. ஏனென்றால், தலித்துகள் விடுதலை அடைய வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கம் விடுதலை அடைந்துவிட்டால், சாதியம் தானாகவே உதிர்ந்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்த கம்யூனிஸ்ட்கள் மத்தியில் இப்போது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டு விழாவையடுத்து கம்யூனிஸ்ட்டுகளும் அம்பேத்கரையும் தலித்துகள் பிரச்னையையும் கையிலெடுத்தனர். இந்த மாற்றம் காலம் கடந்தது என்றாலும் வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால், நல்லக்கண்ணு அவர்கள் மாநிலச் செயலாளராக இருந்தபோது தலித் அமைப்புகளோடு தொடர்ந்த இணக்கம், தா.பா. அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இல்லாதது மட்டுமல்ல; தலித் அமைப்புகளைக் காயப்படுத்தும் விதமாகவே முரண்பாடுகளையும் வெறுப்புணர்வையும் தோழர்களிடையே பரப்பி வருகிறார்.
கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. அப்போது பேசிய தா.பா. அவர்கள் “விடுதலைச்சிறுத்தைகள் சர்க்கஸ் சிறுத்தைகளாக மாறிவிட்டது” என்று செய்தியாளர்களிடம் பேசினார்.
விடுதலைச்சிறுத்தைகளை அதிமுக அணிக்குக் கொண்டுவரப் படாதபாடுபட்டவர் போலவும், இவரே ஜெயலலிதா அம்மையாரிடம் விடுதலைச் சிறுத்தைகளுக்காகத் தொகுதி உடன்பாடு பேசியது போலவும், இதற்கு உடன்படாமல் சிறுத்தைகள் திமுக கூட்டணிக்குப் போனது போலவும் தோழர் தா.பா. அதிக வேதனைப்பட்டு ‘சர்க்கஸ் சிறுத்தைகள்’ என்று கூறினார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட்கள், தே.மு.தி.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இடம்பெற்ற போதும், இக்கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் திடுமென ஜெயலலிதா அவர்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அவமதிப்புச் செய்தார். இந்தச் சூழலில் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இடதுசாரிகள் தலைமையில் திமுக, அதிமுக அல்லாத புதிய அணி உருவாகவேண்டும்” என்று கூறினார்.
இதற்கு பதில் அளிப்பதாகக் கருதிக்கொண்டு தா.பா. அவர்கள் “கம்யூனிஸ்ட்களுக்குச் சொந்த மூளை உள்ளது; மற்றவர்களின் மூளை தேவையில்லை” என்று சொன்னார். விடுதலைச்சிறுத்தைகளைச் சிறுமைப்படுத்திவிட்டாராம். ஆனால், புரட்சிகர அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தா.பா.வுக்கு யாருடன் தோழமை கொள்வது? யாருடன் நட்புப் பாராட்டுவது? யாருடன் பகைமை பாராட்டுவது? என்பது கூடவா தெரியாது. திருமாவளவன் மூளை தேவை இல்லை என்று சொல்வதன் மூலம் அவர் மார்க்சியத்தைத்தான் அவமானப்படுத்தி உள்ளாரே தவிர சிறுத்தைகளை அல்ல. தலித்துகளின் விடுதலைக்காகக் களமாடும் சிறுத்தைகளை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு ‘கூட்டு உற்பத்தி’, ‘கூட்டுக் கருத்தியலை’ வலியுறுத்திய காரல் மார்க்ஸ் கோட்பாட்டைத்தான் தோழர் தா.பா. அவமானப்படுத்தியுள்ளார்.
இது குறித்து எழுத்தாளர் தணிகைச்செல்வன் அவர்கள் ‘தவறிவிட்டார்கள் மார்க்சிஸ்ட்டுகள்’ என்கிற கட்டுரை ஒன்றை ‘நமது தமிழ்மண்’ இதழில் (அக்டோபர் 2011) விரிவாக எழுதியுள்ளார். அதன் ஒரு பகுதி இதோ....
“பல மூளைகளின் கூட்டு உழைப்பால் பெறும் கூட்டுச் சிந்தனையே ஒரு கருத்தை முழுமைப்படுத்தும்; செழுமைப்படுத்தும்” என்று சொன்னவர் லெனின். அதுபோலச் செயல்பட்டவரும் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தப் போரில் பல மூளைகளின் உதவி தேவை என்று கருதியவர் மார்க்ஸ். எனவேதான் அவர் தம்மை தேனீ என்று உருவகப்படுத்திக்கொண்டார். பல மலர்களிலிருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ போல பல அறிவாணர்களின் கருத்தைச் சேகரித்து அவற்றைச் செரித்து என் கருத்தை உருவாக்குகிறேன். எனவே நான் தேனீயாக இருக்க விரும்புகிறேன்; சிலந்தியாக இருக்க விரும்பவில்லை. ஏனெனில் சிலந்தி தன் எச்சில் இழையை நம்பி மட்டுமே வலை பின்னுகிறது. தன்னை மட்டுமே சார்ந்து நிற்கிற இந்தச் செயல் மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், சமூக உறவுக்கும் எதிரானது என்று காரல் மார்க்ஸ் கருதினார். எனவேதான், கம்யூனிஸ்ட் கட்சி பிளீனங்களுக்கு, மாநாடுகளுக்கு தலைமை தாங்க ஒரே ஒரு தலைவரை நியமிப்பதில்லை. பல தலைவர்களைக் கொண்ட ஒரு தலைமைக் குழு ‘பிரசீடியம்’ என்ற பெயரால் நியமிக்கப்படும். பல தலைகளின் மூளைகள் ஒருமைப்படுத்தப்படும்போது அந்தக் குழுவின் முடிவு அறிவுச் செறிவோடு இருக்கும், சனநாயகக் குரலாக இருக்கும் என்ற நோக்கோடு காணப்பட்டதுதான் ‘பிரசீடியம்’ என்ற ஏற்பாடு.
இந்தப் பின்னணியில் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர், சொந்த மூளை போதும்; திருமா மூளை வேண்டாம் என்று பேசிய கூற்றின் தோலை உரித்துப் பார்த்தால் சொந்த மூளை இருக்கும்போது நந்தன் மூளை எதற்கு என்று கூறியதாக பொருள்கொள்ள இடம் இருக்கிறது. தொல்.திருமாவை ஒரு தமிழியத் தலைவன் என்று பாராமல், தலித்துகளின் தலைவன் என்று பார்க்கும் சாதிய நோக்கை அம்பலத்தில் பேசாவிட்டாலும், அந்தரங்கத்தில் பேசிக்கொள்ளும் அரசியல் பெரியவர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பதை நாம் அறிவோம்.
பார்ப்பன மூளைக்கு முன் பாண்டியனார் பணியலாம்; குனியலாம்; தப்பில்லை. ஆனால் பறையின மூளைக்குத் தரும் ஒரே மரியாதை அதைத் தீண்டாத தூரத்தில் நிறுத்தி வைப்பதே என்று தா.பா. மூளை திருமாவை இழிவுபடுத்தியிருக்கிறது. அரசியல் சட்டத்தை இந்தியப் பேரரசுக்கு வழங்கிய மூளை பறைக்குல மூளைதான்; அது மறைக்குல மூளை அன்று. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த தஞ்சை விவசாயக் கூலிகள் பறைக்குலப் பாட்டாளிகளே. அங்கே மறைக்குலம் நிலக்கிழாராக இருந்தது. தேர்தல் அணியில் கம்யூனிஸ்ட் கட்சி தேவையில்லையென்று ஆரிய மூளை எட்டி உதைத்தது. அதை ஈடுகட்ட ஒரு கூரிய மூளையை எட்டி உதைத்துள்ளார் பாண்டியன். காரணம் அது சேரியின் மூளை என்பதால்...” இப்படிப் போய்க்கொண்டேயிருக்கிறது கவிஞர் தணிகைச்செல்வன் அவர்களின் கட்டுரை.
சரி அதுகூடப் போகட்டும், கடந்த 11.2.2012 அன்று திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் நடைபெற்ற 6வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தா.பா. அவர்கள் தலித் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரிய யோசனை ஒன்றை - மார்க்ஸ் சொல்லத் தவறிய தத்துவம் ஒன்றை - அவிழ்த்து விட்டிருக்கிறார். இதோ அந்த அரிய தத்துவம்...
“...இன்று அனைத்துக் கட்சிகளிலும், முதலாளித்துவம் பெருகிவிட்டது. இதற்கு எந்த திராவிடக் கட்சிகளும் விதிவிலக்கு இல்லை. சிறுத்தைகள் கட்சியினர்கூட, தமிழகம் முழுக்க ஆங்காங்கே, அவர்களுடைய தலைவர் திருமாவளவன் புகைப்படங்களை சுவரில் வரைந்துள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் இது மாதிரியான சுவர் விளம்பரங்களை, நாம் பார்க்க முடியும். சுவரில் விளம்பரங்கள் எழுதுகிறவர்களிடம், “அதற்கு எவ்வளவு செலவாகிறது?” என்று கேட்டேன். கிட்டதட்ட 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று சொன்னார்கள். அதைக் கேட்டு நான் பிரமித்துப் போய்விட்டேன். குறிப்பிட்ட பகுதிக்கு விளம்பரம் செய்ய இவ்வளவு ரூபாய் ஆகும் என்றால், தமிழகம் முழுக்க விளம்பரம் செய்ய, பல லட்ச ரூபாய் செலவாகும். அந்தப் பணத்தில், வறுமையில் வாடும், 100 தலித்துகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கலாம்.”
இதுதான் தோழர் தா.பா.வின் அரிய கண்டுபிடிப்பு. அதாவது, தலித்துகள் வீடு இல்லாமல் போனதற்குக்கூட இந்த சுவர் விளம்பரம்தான் காரணமாம்.
காலம் காலமாய் ஆதிக்கச் சாதியினராலும் அரச பயங்கரவாதத்தாலும் ஒடுக்குண்ட தலித்துகளின் வாழ்நிலை பல அய்ந்தாண்டுத் திட்டங்கள் போட்டும் அதனால் எந்தப் பயனும் இல்லை. காரணம் அத்திட்டம் தலித்துகளிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. சாதிய வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் வீடு மட்டுமல்ல மாற்றிக்கொள்ள ‘மாத்துத் துணி’ கூட இல்லாத நிலைதான் தலித்துகளின் நிலை.
சமூகத்தில் மாற்றுத் துணியும், வீடும், உணவுமின்றி வாழும் சக மனிதனின் தேவையைத் தீர்த்துவைக்க தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அக்கறை இருக்க வேண்டும் என்பதில்லை. தோழா தா.பா. போன்றவர்களுக்கும் அக்கறை இருக்கலாம். வசதியான குடும்பத்தில் பிறந்த காரல் மார்க்சுக்கு அந்தத் தொலைநோக்குப் பார்வை இருந்ததால்தான் தொழிலாளர் வர்க்கத்திற்காகத் தன்னை கடைசிவரை அர்ப்பணித்துத்கொண்டார். தா.பா. அவர்களோ “தலித்துகளுக்கு வீடு இல்லை. அதைக் கட்டித்தர வேண்டியது தானே; ஏன் வீண் செலவு செய்கிறீர்கள்” என பண்ணையார்த்தனமான கிண்டலுடன் சொல்லியிருப்பது விடுதலைச்சிறுத்தைகளுக்கு அவமதிப்பு இல்லை. அவர் ஏற்றிருக்கும் கம்யூனிசத்தை அவமதிப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். இந்திய சாதி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கமாக இருக்கும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் பொறுப்பு இடதுசாரிகளுக்கே அதிகமாக இருக்கிறது. ஆனால் தா.பா. அவர்களோ, தலித்துகளுக்காக தலித்துகள்தான் உழைக்க வேண்டும் என்று கருதுகிறார் போலும். அதனால்தான், திருமாவளவன் அவர்கள் வீடுகட்டித் தரட்டும் என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்.
இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றும் ஏழைக் கட்சிகள் இல்லை.. காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளித்துவ கட்சிகளுக்கு அடுத்தபடியாக பெரும் சொத்து சேர்த்து வைத்துள்ள கட்சிகளில் ஒன்றாகத்தான் இடதுசாரிக் கட்சிகள் இருக்கின்றன என்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. நாம் தா.பா. அவர்களிடம் திருப்பி கேட்க முடியும்.. பாட்டாளி வர்க்கமான தலித் மக்களுக்கு நீங்கள் எத்தனை வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்? தாங்கள் நடத்தும் மாநாடுகளுக்கு ஆகும் செலவீனங்களைக் குறைத்து, தலித் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அந்தத் தொகையை செலவழித்திருக்கலாமே? அப்படி செய்ததாக ஏதாவது முன்னுதாரணம் உண்டா?
தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய ஊடக ஆதிக்கங்கள்தான் ஆட்சியையே தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன. திமுக, அதிமுக, பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கென சொந்த தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் உள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கேரளாவில் சொந்தத் தொலைக்காட்சி இருந்தாலும் தமிழகத்தில் அனைத்து ஊடகங்களுமே ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், தலித் மக்கள் விடுதலைக்காக சாதியக் கொடுமைகளுக்கு எதிராகக் களமாடும் விடுதலைச்சிறுத்தைகளைப் போன்ற தலித் இயக்கங்களுக்கு ஊடக ஆதரவோ, ஊடக பலமோ இல்லை என்பது தெரிந்ததுதான். அப்படியென்றால் மக்களுக்கான போராட்டங்களை எப்படி மக்களிடம் கொண்டு போவது? இருப்பது சுவரொட்டிகளும் சுவர் விளம்பரங்களும்தான். சனநாயக நாட்டில் இந்த வாய்ப்புகள்தான் வளர்ந்து வருகிற மக்கள் இயக்கங்களுக்கான ஊடகம். இந்தச் சுவர் விளம்பரங்களுக்கும் சுவரொட்டிகளுக்கும் அந்தந்தப் பகுதிகளில் களப்பணியாற்றும் தோழர்களே வசூலித்து செலவு செய்கிறார்கள். இதைத்தான் எல்லா தலித் கட்சிகளும் செய்து வருகின்றன.
இதற்கான செலவு ரூ.50,000 ஆகும் என்று தா.பா. அவர்கள் சொல்லியிருப்பது வேடிக்கையானதுதான். தோழர் தா.பா. எப்போது ‘பெயிண்டர்’ ஆனோரோ தெரியவில்லை. அல்லது இடதுசாரி தோழர்களுக்கு ரூ. 50,000 கொடுத்துத்தான் ஒரு சுவர் விளம்பரம் செய்யச் சொல்லியிருப்பாரோ என்னவோ தெரியவில்லை.
மதிப்புமிகுந்த பேரியக்கத்தை வழிநடத்தும் தலைவர், நேர்மையான செய்திகளைப் பேசவேண்டும் என்கிற பொறுப்புணர்வுகூட இல்லாமல் மூன்றாந்தர, நாலந்தரப் பேச்சாளர்களைப் போலப் பேசுவது நியாயம்தானா? இப்படிப் பொய்யைப் பரப்புவதன்மூலம் பொதுமக்களிடம் தலித் அமைப்புகளைத் தவறாகச் சித்தரிக்க முயற்சிக்கிறாரா?
விடுதலைச்சிறுத்தைகளைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சியை மதிப்பவர்கள். அவர்களே தலைமைதாங்கி புரட்சிகர அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்று விரும்புபவர்கள். தோழமை சக்தியாக, நட்பு சக்தியாக கம்யூனிஸ்ட்களுடன் அரசியல் பயணத்தைத் தொடரவேண்டும் என்று விரும்புபவர்கள். ஆனால் தா.பா. அவர்களின் போக்கு மார்க்சியத்திற்கே எதிராக இருக்கிறது.
1991ஆம் ஆண்டு விடுதலைச்சிறுத்தைகள் மிக வேகமாக தமிழகம் முழுக்க வளர்ந்துகொண்டிருந்தது. தொல்.திருமாவளவன் அவர்களின் திருக்குறளைப் போன்ற இரண்டடி முழக்கங்கள் சுவரொட்டிகளாகவும், துண்டறிக்கைகளாகவும் சேரியை உசுப்பிக் கொண்டிருந்தது. ஆதிக்க வர்க்கமும் அரச வர்க்கமும் அச்சம் கொண்டிருந்த வேளையில், அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள், “பேருந்துகளில் சுவரொட்டி ஒட்டக்கூடாது” என அடிப்படை உரிமைகளை மறுப்பது போன்ற சட்டத்தைக் கொண்டுவந்தார். அப்போது ‘அடங்க மறு’, ‘அத்து மீறு’ என்கிற முழக்கங்களைப் பெரிதுபெரிதாக அச்சடித்து திமிறி எழுந்து, பேருந்துகளில் ஒட்டிய இயக்கம்தான் விடுதலைச்சிறுத்தைகள். அன்றைக்கு முதல்வராக இருந்து ஜெயலலிதா அவர்கள் போட்ட சட்டத்திற்கும் இப்போது தா.பா. போடும் சத்தத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.
எப்போதுமே ஆதிக்கக் கும்பல் எளியோரின் குரலை அடக்கவே நினைக்கும். இது விதி. இந்த விதியை மாற்ற வந்த கம்யூனிச இயக்கத்திற்குள்ளிருந்து இப்படி ஒரு ஆதிக்கக் குரலா? நம்பவே முடியவில்லை. விடுதலைச்சிறுத்தைகள் தமிழகம் முழுக்க சுவர் விளம்பரம் பண்ணுவதால் தமிழகச் சுவர்கள் எல்லாம் தீட்டுப்பட்டுவிடும் என்கிற போயஸ் தோட்டத்தின் குரலை இப்படிப் பிரதிபலிக்கிறாரா தா.பா. அவர்கள்?
உசிலம்பட்டி பகுதியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி என்கிற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வருபவர் திரு.முருகன்ஜி என்பவர். இவருக்கு இன்னொரு பெயர் ‘ஏழரை முருகன்’. சாதிய வன்கொடுமைகளைத் தலைமைதாங்கி நடத்துபவர். இவர் ஒருமுறை பேசும்போது, “எங்கள் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் போஸ்டரோ, நோட்டீசோ கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் கொடுத்தவன் எவனும் உயிரோடு திரும்ப முடியாது” என்று பகிரங்கமாக 1990களில் பேசினார். இவரது பேச்சுக்கும் தா.பா. அவர்களின் பேச்சுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை.
சமூகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் பெண்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கான விடுதலை வேட்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு, சாதி ஒழிப்பில் கவனம் கொண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் செயல்பட்டிருந்தால் விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் உருவானதற்கான தேவையே இருந்திருக்காது. சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலைமைப் பொறுப்புக்கு இதுவரை எத்தனை தலித் மக்கள் வந்திருக்கிறார்கள்? பாட்டாளி வர்க்க கட்சிகளுக்கான தலைமை, பாட்டாளி வர்க்கத்திலிருந்துதானே வரமுடியும்..? ஆனால், இங்குதான் ஆண்டைகள் மட்டுமே தொடர்ந்து தலைமைக்கு வருகிறார்கள்.. தேசிய அளவில் விடுங்கள்… மாநில அளவிலாவது ஒரு தலித், இடதுசாரிக் கட்சிகளின் தலைமைப் பொறுப்புக்கு வந்ததுண்டா? மாநிலக் குழுக்களில் ஒன்றிரண்டு தலித்துகள் இருக்கலாம். அவர்களும் சேர்ந்து பல பத்தாண்டுகளாக ஆதிக்க சாதியினரையே தலைமைக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், இதுதான் ஜனநாயகமா? இல்லை தலித் மக்களை ஊராட்சி மன்றத் தலைவராகக் கூட ஏற்க மறுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம்தான் இடதுசாரிக்கட்சிகளிலும் இயங்குகிறதா?
குஜராத் படுகொலைகளை நடத்தியவர்களைக் கண்டிக்கும்போது ‘அட சண்டாளர்களே!’ என்று எழுதியவர்தான் தா.பாண்டியன். சண்டாளர் என்பது தலித் மக்களில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் வார்த்தை என்பது தா.பா. அவர்களுக்குத் தெரியாதா? ஆதிக்க சாதித் திமிரின் குறியீடுதான் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சிலை. அதற்கு மாலை போட ஓர் இடதுசாரியான தா.பா. அவர்களால் எப்படி முடிகிறது? இல்லை அம்பேத்கர் சிலைக்குத்தான் என்றைக்காவது மரியாதை செலுத்தியிருக்கிறாரா? பசும்பொன் முத்துராமலிங்கத்தின் ‘பெருமிதங்’களைப் பேசும் புத்தகங்களை எழுதித் தள்ளும் ஜீவபாரதிதான், தா.பா. அவர்கள் ஆசிரியராக இருக்கும் ஜனசக்தி இதழில் கட்டுரைப் பிரிவு ஆசிரியர். இருவரும் ஒரே சாதியினர் என்பதைக் கூட தற்செயலான ஒன்றாகப் பார்த்தாலும், அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் தா.பாண்டியன் கலந்து கொண்டதை அப்படிப் பார்க்க முடியவில்லை. உத்தப்புரம் தலித் மக்களின் மீதான தீண்டாமைச் சுவர் பிரச்சினையை ‘ஆன்மீகப் பிரச்சினை’ என்று சொன்னவர்தான் தா.பாண்டியன். சாணிப்பாலுக்கும், சவுக்கடிக்கும் எதிராகப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இன்று பரமக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற கொடூர சம்பவங்கள் நடக்கும்போதுகூட, பேருக்கு ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுவிட்டு வாளாவிருப்பது, அதன் தலைமையில் தா.பாண்டியன் இருப்பதால்தானா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தோழர்கள், தா.பா. அவர்களின் இத்தகைய பண்ணை ஆதிக்கப் போக்கை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அல்லது தா.பா.வின் இத்தகைய போக்கை ஆதரிக்கிறார்களா என்பது கேள்வியாகக் கொதிக்கிறது.
‘பொதுத் தெருவில் நடந்து போகக்கூடாது, பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது, தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்தக்கூடாது’ கொட்டாங்குச்சியோடு தான் வரவேண்டும். சுடுகாடாயினும் இடுகாடாயினும் தனித்தனியாகத்தான். இப்படி சமூகத்தளத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்ட தலித் மக்களின் வலியை என்றைக்காவது தா.பா. அவர்கள் உணர்ந்திருப்பாரா?
சமூகத்தளத்தில் சாதியவாதிகள் எப்படி கிண்டலும் கேலியுமாகப் பேசுவார்களோ அப்படித்தான் அரசியல்தளத்தில் தா.பா. அவர்கள் செயல்பட்டு வருகிறார். ஏனென்றால், இன்றைக்கு பொது நீரோட்டத்தில் இணைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பொதுத் தெருவில் நடக்கவோ, பொதுக்கிணற்றில் நீர் எடுக்கவோ எப்படி சாதி ஆதிக்கவாதிகள் தடைபோட்டு எதிர்ப்புத் தெரிவிப்பார்களோ… அதைப்போல பொதுச்சுவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது என்று தா.பா. அவர்கள் மறைமுகமாகக் கூறுகிறார். அரசியலிலும் சமூகத்திலும் தலித்துகளை பொது நீரோட்டத்தில் இணையவிடாமல் தடுப்பது என்பது ஆதிக்க சாதிகளின் அதிகாரத்தைத் தக்கவைப்பதும் அதிகாரத்தைப் பிறர் பங்குபோட்டு விடக்கூடாது என்பதும்தானே. இதை உடைப்பவர்கள்தான் புரட்சிகரச் சக்திகள்; கம்யூனிஸ்ட்கள்; தலித் அமைப்புகள். ஒடுக்குவதும் ஒதுக்குவதும் பார்ப்பனியம்தான். தா.பா.வின் மூளை பார்ப்பனியமயமாகி வருவதைத்தான் இம்மாதிரியான கருத்துகள் உறுதிப்படுத்துகின்றன.
தலித்துகள், சிறுபான்மைச் சமூகத்தினர், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற விளிம்புநிலை மக்கள் ஒரே நேர்க்கோட்டில் - ஒரே களத்தில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. இவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இடதுசாரிகளுக்கு இருக்கிறது. புரட்சிகரஅரசியலை மக்களிடம் கொண்டுசெல்வதன் மூலம்தான் வென்றெடுக்க முடியும். ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’, ‘சிவப்பு எம்.ஜி.ஆர்’ என்று சொல்லித் திரியும் நடிகர்கள் பின்னால் போவதால் புரட்சிகர அரசியலை - மார்க்சிய அரசியலைக் கொண்டுபோக முடியாது. தோழர் தா.பா. போன்ற ‘சிவப்பு சாயம்’ பூசிக்கொண்டவர்கள் பேசாமல் ‘கருப்பு எம்.ஜி.ஆர்.’ அல்லது ‘புரட்சித்தலைவி’ கட்சிகளில் சேர்ந்து ‘சமுதாயக் கடமை’யைச் செய்யலாம். அதை விட்டுவிட்டு இப்படி மார்க்சியத்தை அவமதிப்பது நியாயமா?
மீண்டும் முதலிலிருந்தே வருவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பழம் பெரும் கட்சி. தோழர் ஜீவா, அய்யா நல்லகண்ணு போன்ற தியாகிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி. சாணிப் பால், சவுக்கடிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய கட்சி. பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்றெல்லாம் பெயர் வாங்கிய கட்சி. அப்படிப்பட்ட கட்சியில் - அப்படிப்பட்ட தியாகத்தில் தா.பா. போன்றவர்கள் அமர்ந்திருப்பது அத்தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதாக, அவமதிப்பதாகத்தான் கருத முடியும்.
உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் பிரச்சனைக்குரிய ‘டேவிட் பண்ணை’யின் முதலாளியான தா.பா. பண்ணையாருக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வலியும் வேதனையும் புரியாதுதான். மார்க்சியத்திற்காகவே தம்மை அர்ப்பணித்துக்கொண்ட தோழர்கள்தான் புரிய வைக்க முடியும்... புரிய வைக்க வேண்டும்.
- வன்னிஅரசு 

0 comments:

Post a Comment