22 July 2012

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை - வன்னிஅரசு

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
- வன்னிஅரசு

நெருப்பைக் கடப்பது எளிது
பொறுப்பாய் நடப்பது கடிது
புயலைக் கொண்டுவருவது எளிது
மக்களை அமைப்பாக்குவது கடிது
எது கடிதோ, எது முடியாதோ
அதை நிகழ்த்துதல்தான் புரட்சி

பொதுக் கிணற்றில்
புது பக்கெட் வாங்கிக்கூட
தண்ணீர் எடுக்க முடியாது
பொதுத் தெருவில்
புதுச் செருப்புடன்கூட
நடமாட முடியாது
சைக்கிளில் செல்ல முடியாது
நல்ல பெயர் வைக்க முடியாது
நல்ல சோறு சாப்பிட முடியாது
கை நிறைய காசு இருந்தும்
கொட்டாங்குச்சியில்தான் தேநீர்
அது ஒரு காலம்
அது நீலத் துண்டுகளின் காலம்
அது மனுக்கொடுக்கும் காலம்
அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது

அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி
இந்த முழக்கமே பொதுப் பாதையைத் திறந்து விட்டது
பொதுக் கிணற்றை உடைத்து
சேரிப்பக்கம் மடை மாற்றியது
தேநீர்க் கடைகளெல்லாம் அதிர்ந்தன
தனிக் குவளைகள் உடைந்தன

இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
இந்தப் புரட்சியை நடத்திக் காட்டியது யார்?

பொன்விழாக் காணும் போராளித் தலைவரை
காலம் முன்மொழிகிறது
அர்ப்பணிப்பு வழிமொழிகிறது

நெல்லை விதைத்தால்
நெல்லைத்தான் தரும் வயல்
வானம் பார்த்த பூமியானாலும்
கம்மங் கதிர்களும் வரகு கதிர்களும்
காத்துக்கிடக்கின்றன விவசாயிகள் வருகைக்காய்
முளைப்பாரித் திருவிழாவும்
பெரிசுகளின் கும்மியாட்டமும்
வயலுக்கும் வீட்டுக்குமாய்
தானியங்கள் குவிந்து கிடக்கும்.

அந்த விவசாயிக்குத் தெரியும்
நிலம் என்னுடையது
பயிர் என்னுடையது
உழைப்பு என்னுடையது
இலாபமும் என்னுடையது

அந்த விவசாயிக்குத் தெரியும்
நமக்கு நாமே திட்டத்தின்கீழ்தான்
வெள்ளாமையைப் பெருக்க முடியும் என்று

இப்போது சொல்லுங்கள்
இந்த அமைப்பு என்னுடையது
இந்த கோட்பாடுகள் என்னுடையவை
இந்த அமைப்பின் அனைத்தும்
எனக்கே எனக்கு

நாமே கொட்டுவோம் தங்கக் காசுகளை
நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
தொடர்வோம் தகதக தங்க வேட்டையை

0 comments:

Post a Comment