22 July 2012

சமூகப் புரட்சி செய்த போராளித் தந்தையின் நினைவு நாள் வன்னிஅரசு


சூலை 14ஆம் நாளே அங்கனூருக்குப் புறப்பட்டாச்சு...


கடலூர் மாவட்டத்திற்குள் நுழைகிற இடத்திலிருந்து அங்கனூர் வரை ஒரே சுவரொட்டிகள்மயம்தான்... 'சூலை 15ஆம் நாள் அய்யா தொல்காப்பியன் நினைவு நாள்... போராளித் தலைவரை எமக்களித்த போராளித் தந்தைக்கு வீரவணக்கம்!' என்ற வாசகங்களை சுவரொட்டிகள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. வெற்றிலைக் கறை பற்களுடன் அய்யா தொல்காப்பியன் அவர்களின் சிரிப்பு செம்மண் வரப்புப்போல் இருந்தது. சிரிக்கிறாரா நகைக்கிறாரா என்று தெரியாத அளவுக்கான சிரிப்புடன் சுவரொட்டி எம்மை வரவேற்றது.
தலைவரின் தனிச் செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் ஆகியோருடன் நானும் அங்கனூர் மண்ணில் நுழைந்தேன். முதலில் அய்யா தொல்காப்பியன் அவர்களின் நினைவிடத்திற்குச் சென்றோம். தலைவரின் தம்பி செங்குட்டுவன் தலைமையில் நினைவிடத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மறுபுறம் புதுச்சேரியைச் சேர்ந்த தோழர் சிவந்தவன் தலைமையில் நினைவிடத்தைச் சுற்றி வரவேற்பு அலங்காரங்கள் அமைக்கும் பணிகள் நடந்தன. பின்னர் சமையல் நடைபெறும் திறந்த நிலப்பரப்புக்கு வந்தபோது அங்கே, அங்கனூர் தம்பிகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த விளையாட்டையும் விடவில்லை. அரசியல் களத்தைப்போலவே கிரிக்கெட்டிலும் புகுந்து விளையாடினார்கள் (வேற யாரு... தகடூர் தமிழ்ச்செல்வனும், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வனும்தான்).

அண்ணன் டொமினிக் தலைமையிலான சமையல் குழு வந்தது. விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த கனல், ஜீவா மற்றும் வளசரவாக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் சமையல் செய்யும் ஊழியர்களுக்கு உதவியாக வந்திருந்தனர். அய்யா தொல்காப்பியன் அவர்களின் பெயரைச் சொல்லி அங்கனூரிலேயே நாட்டுக்கோழி சாப்பாட்டை அன்றைக்கு உண்டு முடித்தோம்.
சூலை 15ந்தேதி காலை 10 மணியளவில் போராளித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் அங்கனூருக்கு வந்து சிறுத்தைகளுடன் அஞ்சலி செலுத்தினார். கருத்தியல் பரப்பு மாநிலத் துணைச் செயலாளர் தோழர் திருமாறன் 'வீரவணக்கம் வீரவணக்கம் எமது தந்தை தொல்காப்பியன் அய்யா அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!' என்று முழக்கமிட சிறுத்தைகளும் ஊர் மக்களும் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.
பின்பு சுற்றியுள்ள ஊர்மக்கள் பயன்பெறும் வகையில் அங்கனூர் பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இலவச சித்த மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம்களை போராளித் தலைவர் தொடங்கி வைத்தார். அய்யா தொல்காப்பியன் அறக்கட்டளை சார்பில் இந்நிகழ்வுகளை ஆசிரியர் சேது சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
நினைவு நாள் நிகழ்வை அவசர அவசரமாக முடித்துவிட்டு, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாலை 3 மணியளவில் அங்கனூரிலிருந்து விருதுநகர் நோக்கி போராளித் தலைவரின் வாகனம் பறக்க ஆரம்பித்தது. விருதுநகருக்குள் நுழைந்தபோதே பெரும் மழை வரவேற்றது. செய்தியாளர்கள் சந்திப்பு, பெருந்தலைவர் நினைவிடத்தில் வீரவணக்கம், பெருந்தலைவர் பிறந்த வீட்டில் மாலையணிவித்து மரியாதை செய்தல் என பெருந்தலைவர் நடமாடிய மண்ணில் பெருந்தலைவருக்கு போராளித் தலைவர் அஞ்சலி செலுத்தினார். தொண்டர்களின் வரவேற்பு மழைக்கு ஊடாக போராளித் தலைவர் இரவு 9 மணிக்கு மேடையேறினார்.
வழக்கம் போலவே சிறுத்தைகளின் முண்டியடிப்பும், விசில் சத்தமும் கரவொலியும் விருதுநகரை அதிரவைத்தது. மழை முடிந்து தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க அதன்மேல் நாற்காலி போட்டு போராளித் தலைவரின் உரைவீச்சைக் கேட்க சிறுத்தைகள் காத்திருந்தனர். மழைத் தூறலும் தென்றல் காற்றும் இணைந்து குற்றாலச் சாரலாய்த் தவழ்ந்து கொண்டிருந்தது... போராளித் தலைவரின் உரையைக் கேட்கத்தான். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் பேசி முடித்தபின், போராளித் தலைவர் உரையைத் தொடங்கினார்.
பெருந்தலைவரைப் பற்றி போராளித் தலைவர் பேசப் பேச வந்திருந்த நாடார் பெருமக்களே வியப்போடு கேட்க ஆரம்பித்தனர்.
"ஆடு மாடு மேய்க்கிற குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக யோசித்துக் கொண்டுவந்த திட்டம்தான் மதிய உணவுத் திட்டம். ஒரு நாள் பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருக்கும்போது கார் பழுதாகிவிட இறங்கி நின்று கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் பெருந்தலைவர் பள்ளிக்குப் போகவில்லையா என்று கேட்க, நாங்கள் ஆடு மாடு மேய்த்தால்தான் மதியம் சாப்பிட முடியும் என்று அந்தச் சிறுவர்கள் சொன்ன பதில்தான் பெருந்தலைவரை யோசிக்க வைத்தது. அதன் விளைவுதான் மதிய உணவுத் திட்டம். ஊரில் பேய் பிடித்துவிட்டது என்று சொல்வார்கள். அதனைப் போக்க கோடாங்கி கொண்டுவந்து அடிப்பார்கள். பேய் என்பது இல்லை. பேய் என்றால் பயம். பயத்தின் மூலம்தான் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. அதுதான் பேய். இந்தப் பேயை ஓட்ட வேண்டுமென்றால் அதற்கு அருமருந்து கல்விதான் என்பதைச் சிந்தித்து அதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் மதிய உணவுத் திட்டம். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று படிக்க ஆரம்பித்தார்கள். அப்படி பள்ளிகளில் மதிய உணவு போடவில்லையென்றால் நானே படித்திருக்க முடியாது. இது பெருந்தலைவர் கல்வித் துறையில் கொண்டுவந்த புரட்சி.
சமூகத்தில் காணாமை, தீண்டாமை, அண்டாமை என மோசமான சூழல் ஒன்று இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்க்கலாம், ஆனால் தொட்டுவிடக் கூடாது. தொட்டால் தீட்டுப் பட்டுவிடும். இது தீண்டாமை. நாடார் குலப் பெருமக்களைப் பார்க்கவே கூடாது. பார்த்தாலே தீட்டுப்பட்டுவிடும் என்னும் கொடுமை. அது காணாமை. ஒரு சில சமூகத்தினர் இத்தனை அடி தூரம் தள்ளிதான் வரவேண்டும் என்று ஒரு நிலைமை இருந்தது. இது அண்டாமை. தலித்துகள் கோயிலுக்குள்ளேயே நுழைய முடியாது. அப்படிப்பட்ட காலத்தில் அந்தக் கோயில்களுக்கே
பி. பரமேஸ்வரன் என்கிற பறையனை அமைச்சராக்கி ஆன்மிகத் தளத்திலும் பெரும் புரட்சி செய்தவர் பெருந்தலைவர். கோயில்களுக்குள்ளேயே நுழைய முடியாத பறையனை மேள, தாளம், பூரண கும்ப மரியாதையோடு கோயில்களுக்குள்ளே அழைத்துச் செல்லுகிற வகையில் பரமேஸ்வரனை அமைச்சராக்கியது சாதாரண செயலல்ல. பெருந்தலைவர் செய்த பெரும் புரட்சி, ஆன்மிகப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சி.
இதேபோல் அரசியல் தளத்திலும் பெரும் புரட்சி செய்தார் பெருந்தலைவர். அதுதான்
'கே ப்ளான்' அதாவது 'காமராசர் ப்ளான்' என்பார்கள். பொதுவாக ஆதிக்கம் மிகுந்த வடஇந்தியர்கள் தென்னிந்தியர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தென்னிந்தியர்களின் அடிமைப் புத்தியை வடவர்கள் பயன்படுத்திக்கொண்டு இழிவுபடுத்துவார்கள். ஆனால் நமது பெருந்தலைவரை வடஇந்தியர்களே தலைவராக ஏற்றுக்கொள்ள முடிந்தது என்றால் என்ன காரணம்? அதுதான் 'காமராஜ் ப்ளான்'. "அரசு உயர் பதவியில் உள்ளவர்களெல்லாம் உடனடியாகப் பதவி விலகி கட்சிப் பணிக்குத் திரும்ப வேண்டும். காங்கிரஸ் கட்சி கலகலத்துப் போய்விட்டது. கட்சியைக் காப்பாற்ற இதுதான் வழி" என்று சொல்லிவிட்டு தமது முதல்வர் பதவியைத் துறந்தார் பெருந்தலைவர். இந்தத் திட்டம் சரியான திட்டம் என்று ஜவகர்லால் நேரு ஏற்றுக்கொண்டார். அதன்படி, காமராசர் அகில இந்தியக் கட்சியின் தலைவரானார். வட இந்தியர்களே தலைவராக ஏற்றுக்கொண்டனர். இத்தனைக்கும் பெருந்தலைவருக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரியாது. ஆனாலும் அனைவரையும் ஆட்டிப் படைத்தார். இதற்குக் காரணம் அவரிடம், நான் படிக்காதவன். எனக்கு ஆங்கில அறிவு இல்லையே என்கிற தாழ்வு மனப்பான்மை ஒருபோதும் பெருந்தலைவரிடம் இல்லை. தன்னம்பிக்கையோடு அரசியல் களத்தில் களமாடினார். அரசியல் களத்தில் புரட்சி செய்தார். இங்கு வந்திருக்கின்ற பலர் படிக்காதவர்களாயிருக்கலாம். அதற்காக வருத்தப்படாதீர்கள். பெருந்தலைவரைப் பாருங்கள். அவர்தான் தாழ்வு மனப்பான்மையைப் போக்கும் அருமருந்து.
இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் பெருந்தலைவருக்கு விழா எடுக்கிறோம் என்றால், நன்றி உணர்வால்தான். கல்விப் புரட்சி செய்து தலித்துகளைப் படிக்க வைத்திருக்கிறார். தலித்துகள் கோயிலுக்குள் நுழையும் வகையில் ஆன்மிகப் புரட்சி செய்தவர் பெருந்தலைவர். ஆகவேதான் பெருந்தலைவரை சிறுத்தைகள் போற்றுகின்றோம்." இவ்வாறு போராளித் தலைவர் பேசினார்.
மழை தூறினாலும் போராளித் தலைவரின் உரை வந்திருந்தோரை கட்டிப்போட்டது. காமராசர் குறித்து வகுப்பு எடுத்ததுபோல் இருந்ததாக பொதுமக்களும் நாடார்குலத் தலைவர்களும் கூறினார்கள். வந்திருந்த சிறுத்தைகளோ, இனி எங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்காது என்று சட்டையைத் தூக்கிவிட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர். பெருந்தலைவர் குறித்த போராளித் தலைவரின் உரை இளைஞர்களிடையே பெரும் அமைதிப் புரட்சியை செய்துகொண்டிருக்கிறது.
இப்படியான சிறப்பான கூட்டத்தை ஒருங்கிணைத்த கட்சியின் தோழர்கள் சிவகாசி ராசா, வில்லவன் கோதை உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இல்லாமையும், கல்லாமையும் போக்க மதிய உணவுடன் கல்வியை வழங்கி கல்விப் புரட்சி செய்த காமராசர் பிறந்த நாளும், தாழ்வு மனப்பான்மையைப் போக்கி தலித்துகளைத் தலைநிமிரச் செய்து சமூகப் புரட்சி செய்த போராளித் தலைவரை எமக்குத் தந்த போராளித் தந்தையின் நினைவு நாளும் ஒரே நாளில் அமைந்தது மிகப் பொருத்தமே.

0 comments:

Post a Comment