12 March 2015

இந்தியாவுக்கு கடற்படை ஒரு கேடா?

பயணங்களில் மிக மகிழ்ச்சியான பயணம் கடல்வழிப் பயணம்தான். அதே நேரத்தில் ஆபத்துகள் நிறைந்த பயணமாக நாவல்களும், திரைப்படங்களும் அச்சுறுத்தியுள்ளன. அதுவும் ‘தினத்தந்தி’யில் வரும் கன்னித்தீவு நாயகன் சிந்துபாத், நாயகி லைலாவை அடைவதற்காகக் கடல்தாண்டி, மலைதாண்டி பயணிப்பார். அதில்கூட கடல்வழிப் பயணத்தில்தான் பல ஆபத்துகளை சிந்துபாத் சந்திப்பார். அப்போதெல்லாம் நாமும் கடலில் பயணம் செய்தால் எப்படி ஒரு ‘த்ரில்’ இருக்கும் என்பதை நினைக்கும்போதே அச்ச அலை அடிக்க ஆரம்பிக்கும்.

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய நாவல்களில் புக்கர் பரிசு பெற்ற ‘The old man and the sea’ நாவலில் வரும் நாயகன் சாண்டியாகு கடலில் படும் பாடுகளை நினைத்தாலே கடலிலிருந்து தரையில் விழுந்து துடிக்கும் மீனைப் போலத்தான் நம் மனம் துடிக்கும்.

அப்படித்தான் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடல்வழிப் பயணத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ மக்களின் விடுதலைக்காக, சாவை ஒரு குப்பியில் அடைத்துக் கழுத்தில் மாட்டிக்கொண்டு போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூலம்தான் அந்த அழைப்பு வந்தது.
போர் தொடங்கிய நேரம். வான்வெளியில் விமானங்கள் ‘கிபீர்’ குண்டுகளை அப்பாவி தமிழ் மக்கள் மீது பொழிந்து கொண்டிருந்தன. ‘ஷெல்’கள் வெடித்துச் சிதறுகையில் பனை மரங்களும், காணிகளும்கூட ஓலமிட்டன.

இந்தச் சூழலில்தான் இராமேசுவரத்திலிருந்து கடல்வழிப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. முதல் நாள் இரவிலிருந்து தூங்க முடியவில்லை. கடல் அலைகள் முகத்தை முத்தமிட்டுப் போயின. சீறிப் பாயும் புலிகளின் படகுகள் கடலைக் கிழித்துக்கொண்டு பறந்தன. நெருப்பாய்க் கொதித்தது கடல் நீர். கடல் பயணம் இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ என்று நினைத்து நினைத்துத் தூக்கம் படகேறிப் போனது.

மடிஅடித்து மீனவனாக மாறி அதிகாலை படகில் ஏறிய 1 மணி நேரத்தில் கடல் ஒவ்வாமையால் வாந்தி.. குடல் பகுதியின் கடைசி நீரும் கடல் நீரில் கலந்தது. 5 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நமது மீனவச் சொந்தங்களின் படகிலிருந்து புலிகளின் படகுக்கு மாற்றம். எந்த நேரமும் சொடுக்கத் தயாராகும் துவக்குகள். கையைத் தட்டினால் கடல் அலைகளும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் கம்பீரம். நான்கே புலிகள். அழைக்க வந்திருந்தார்கள். கேனல் சேரலாதன்தான் எம்மைக் கைத் தூக்கி புலிகளின் படகுக்குள் இழுத்தார். ‘சேரா’ என்று அன்புடன் அழைக்கப்படும் சேரலாதன், தமிழீழ ஊடகப் பிரிவின் பொறுப்பாளர். ‘ஒளிவீச்சு’ என்னும் ஒளி நாடா ஊடகத்தை உருவாக்கியவர். (இதைப் பார்த்துத்தான் பின்னாளில் ‘தமிழ்மாலை’ என்று மாறன் தொடங்கினார்.) எப்போதும் பாட்டும் பகடியுமாய் இருக்கும் களப்புலி சேரா. இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படியான ஊடகப் புலி நீண்ட கால நண்பர். இவரின் முயற்சியில்தான் இந்த கடல்வழிப் பயண வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகத்தின் அரசியல் நிலவரத்தைக் கதைத்துக்கொண்டே இழுவை வயரை இழுத்துவிட படகு நெருப்பை இரைத்துக்கொண்டு பறந்தது. வானும் கடலும் ஒரே நேரலையில் சங்கமித்தன. இருளும் அலையும் வெள்ளியை அள்ளிக்கொண்டு வருவது போன்று கடல் அலையை அள்ளி வந்தன. வங்காள விரிகுடா அமைதியானது. புலிகளின் படகு போகிறது. எல்லாம் அமைதியாய் இருப்போம் என்று அமைதியானது. புலிப் படகின் பாய்ச்சல் பேரிரைச்சலாய் கடலைக் கிழித்துக்கொண்டு சீறியது. ஒரு மணி நேரத்தில் நாச்சிகுடா என்னும் நாவலந்தீவில் இறங்கிவிட்டது. படகிலிருந்து கை கொடுத்து வரவேற்றார் கேனல் சிறீராம். (படுகொலையான இசைப்பிரியாவின் கணவர்.) “வாங்க மச்சான்” என்று வரவேற்று அழைத்துப் போனார் வன்னிதேசத்துக்கு.

நாச்சிகுடா தீவில் இறங்கும்போது வேறு படகு ஒன்று புறப்படத் தயாரானது. அந்தப் படகு எங்கு போகிறது என்று கேட்டபோது, கச்சத்தீவுக்குப் போகிறது என்றனர் கடல் புலிகள். அங்குதான் புனித அந்தோணியார் கோவில் இருக்கிறது என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், நெடுந்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள ஈழத் தமிழர்களும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வது நீண்டகாலத்து வழக்கம் என்ற கூடுதல் தகவலையும் தந்தனர். அப்போதிருந்தே கச்சத்தீவு போக வேண்டும் என்கிற ஆவல் அவ்வப்போது மேலெழும்பிக்கொண்டே இருந்தது.

இராமேசுவரத்தைக் கூட நெடுந்தீவுக்காரர்கள் ‘தீவு’ என்றுதான் குறிப்பிடுகின்றனர். நீண்ட காலமாக கச்சத்தீவை ஒரு வழிபாட்டுத்தலமாக இரு நாட்டுத் தமிழர்களும் கொண்டிருந்தாலும் வணிகத்திற்கும் பயன்பட்டதாகக் கூறுகின்றனர். 1974ஆம் ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி - இலங்கை அதிபர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் கச்சத் தீவைக் கையளித்தபின் கச்சத் தீவுக்கு தமிழர்கள் யாருமே போக முடியவில்லை. 1974ஆம் ஆண்டு வந்த கச்சத் தீவு ஒப்பந்‌தத்தில் மொத்தம் 8 விதிகள் உள்ளது. அதில் 5, 6ஆம் விதிகளில் கச்சத் தீவுக்கு மீனவர்கள் போவதற்கோ, புனித அந்தோணியார் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கோ எந்தத் தடையும் இல்லை. யாரிடமும் அனுமதியும் கேட்க வேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் எழுதிய நூலில் கச்சத் தீவு குறித்து இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தமே செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். திமுககூட இந்த ஒப்பந்தம் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சட்டப்படி ‘Historical Water’ கடல் பரப்பில் இந்த ஒப்பந்தங்கள் செல்லாது என்பதுதான் சரியானது. ஆனால் எல்லை மீறியதாக, இன்று வரை 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தெற்காசியப் பெருநிலப்பரப்பில் வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவின் குடிமகனை குருவி சுடுவதுபோல் சுட்டுக்கொல்கிறார்கள். ஆனாலும், வெட்கமே இல்லாமல் வங்காள விரிகுடா கடல் பரப்பில் இந்தியக் கப்பல் படையைச் சேர்ந்த வீரர்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தக் கேவலத்தை கடந்த 28-2-2015 அன்று அனுபவிக்க நேர்ந்தது. கச்சத் தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்குப் போக கடந்த இரு ஆண்டுகளாகவே முயற்சி செய்து வந்தோம். இந்த ஆண்டுதான் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

28ஆம் தேதி காலை 10 மணிக்கு இராமேசுவரம் கடற்கரைக்கு வரச்சொல்லியிருந்தார்கள். அதற்கு முன்னதாகவே கடற்கரைப் பரப்பெங்கும் கச்சத் தீவுக்குப் போகத் தயாராகும் மக்கள் கூட்டம். தமிழகக் காவல்துறையும் கடலோரக் காவல்படையும் மக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தது. எமது படகு எண் 89. வரிசை வரிசையாக அழைத்துக் கொண்டிருந்தனர். எந்த வசதியும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இந்திய அதிகாரிகள் மட்டும் நிழலில் அமர்ந்திருந்தார்கள். கச்சத் தீவு போகும் பக்தர்களுகளோ கடும் வெய்யிலில் கொதிக்கும் மணற்பரப்பில் காத்திருக்க வேண்டியிருந்தது. எந்த ஒழுங்கும் செய்யப்படவில்லை. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் படாதபாடு படவேண்டியிருந்தது.

காலை 10 மணிக்கு நின்றவர்கள் நண்பகல் 1 மணிக்குத்தான் சுங்க அதகாரிகள் முன் நிறுத்தப்பட்டோம். சோதனைகள் செய்கிறார்களாம்... அவ்வளவு சோதனைகள்! நாவறண்டு தண்ணீர்த் தாகத்தில் மயக்கம் போட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்படவோ, முதலுதவி செய்யவோ அங்கு எந்த முகாமும் அமைக்கப்படவில்லை. மந்தை மந்தையாக படகில் ஏற்றிவிட்டு தன் கடமையைச் செய்ததாக திருப்திப்பட்டுக்கொண்டார்கள் சுங்க இலாகா அதிகாரிகள். காவல்துறையின் பல்வேறு கடும் சோதனைகளுக்குப் பிறகு, படகு கச்சத் தீவு நோக்கி விரைந்தது.

கடந்த முறை நாச்சிகுடா தீவு பயணத்திற்கும் கச்சத்தீவுப் பயணத்திற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. இடையே இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் வீரர்களும் கடலில் ரோந்து வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு படகிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? குழந்தைகள், பெண்கள் எத்தனை என்று கணக்கைச் சரிபார்த்து சரிபார்த்து அனுப்பிக் கொண்டிருந்தனர். வெள்ளி நிலா கடலுக்குள் குதித்து குதித்து விளையாடுவதுபோல் மீன்கள் துள்ளி துள்ளி படகுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்தன. 

 தமிழினத்தின் அடையாளமாக கடல் நீர் கருப்பு வயப்பட்டிருந்தது. அப்படியே கடல் நீர் குதித்து குதித்து எழுவதுபோல் அலை மேலெழும்பியது. மேலெழும்பிய கடல் அலை நம்முடன் ஏதோ கதைப்பது போலவே இருந்தது. இந்தக் கடல்தான் மாவீரன் கிட்டு உள்ளிட்ட 18 புலிகளை விழுங்கியது. இந்தக் கடல்தான் தங்கச்சி அங்கயற்கண்ணியை உள்வாங்கியது. சிங்கள ஆதிக்க ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப் பிழைக்க ஓடிய எம் சொந்தங்களைச் சுமந்து சுமந்தே இந்தக் கடல் தள்ளாடுகிறதே... இந்தத் தள்ளாட்டத்தில் எத்தனை பேர் செத்து மடிந்தார்களோ! கடல் பரப்புக்கு மேலே மட்டுமல்ல உள்ளேயும் எம் சொந்தங்கள்.

அதோ... கச்சத் தீவு என்று படகைச் செலுத்திக் கொண்டிருந்த மீனவச் சொந்தத்தைச் சார்ந்த தம்பிகள் கை நீட்டிக் காட்டிய திசையை நோக்கிப் பார்த்தபோது நமக்கு முன்பு ஏராளமான படகுகள் கச்சத் தீவை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன. 'சயூரா' என்ற ஒரு சிங்களக் கடல் படையைச் சார்ந்த கப்பல் கச்சத் தீவை ஒட்டி நின்றுகொண்டிருந்தது. அதற்கு நேரெதிரிலே ‘விக்ரகா’ என்னும் இந்தியக் கப்பல் நின்று கொண்டிருந்தது. தமிழகப் படகுகள் இந்தியக் கப்பல் படையின் கேப்டன் நினைத்த மாதிரி வராததால் தமிழர்களை மிக மோசமாக நடத்தினார். அவமதிப்புச் செய்ததால் தமிழ்நாட்டைச் சேர்ந்த படகுகள் சிங்களக் கப்பலை நோக்கி நகர்ந்தன. அங்கு போனதும் இன்னும் ‘Green signal’ வரவில்லை. போய் அணுகி வாங்கிவரச் சொன்னார்கள். என்ன அனுமதி என்றால் இந்தியக் கடற்படை கேப்டனின் அனுமதி. இவர் சிங்கள அதிகாரிக்கு ‘Green signal’ செய்யவில்லையாம். மீண்டும் இந்திய ‘விக்ரகா’ கப்பலுக்கு வந்து அனுமதி வாங்கிய பிறகே நகர முடிந்தது.

கடற்கொள்ளையர்களை எப்படி நடத்துவார்களோ அப்படி தமிழர்களைப் படகிலேயே வரிசை வரிசையாக மூன்று முறை சுற்ற வைத்து, உட்கார வைத்து எண்ணிவிட்டு விரட்டினார்கள். இந்தி அதிகாரிகளும், மலையாளிகளும் கப்பல் மேல்தளத்தில் நின்று சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தார்கள். ‘சிங்களமும் இந்தியமும் தமிழுக்கு இரட்டைப் பகை’ என்பதை அனுபவரீதியாகக் காண முடிந்தது. 

இரவு 8 மணியளவில் கச்சத் தீவில் இறங்கியபோது, சிங்களக் காவல்துறையும் கடல் படையைச் சேர்ந்தவர்களும் எந்தச் சோதனையுமின்றி உள்ளே அனுமதித்தனர். இந்திய அதிகாரிகளைவிட சிங்கள அதிகாரிகள் மேலானவர்கள் என்று எண்ணும் வகையிலான செயல்பாடுகளைக் கச்சத் தீவில் காண முடிந்தது. கடந்த முறையைவிட பக்தர்கள் அதிகம் என கடற்கரை ஓரத்தில் படுத்துக்கொண்டிருந்தவர்கள் கூறினர். அவர்களுக்குப் பக்கத்திலேயே 89ஆம் எண் படகைச் சேர்ந்தவர்களும் படுத்துக்கொண்டோம். கச்சத் தீவு முழுக்க, அந்த அந்தோணியார் கோவிலைச் சுற்றி எங்கெங்கு இடம் கிடைத்ததோ அங்கெல்லாம் மக்கள் படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். தேவாலயத்தில் இரவு 12 மணி வரை ஜெப ஆராதனைக் கூட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது.

“போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்காகவும், காணாமல் போனவர்களுக்காகவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் இன்னும் சிறைப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காகவும், அம்மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்படியாக ஜெபிப்போமாக..!” என்று ஆராதனைப் பாடல்களுக்கிடையே ஜெபித்தனர்.

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் சந்தித்துக் கொண்டாலும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டனர். அங்கு போடப்பட்டிருந்த சந்தையைச் சுற்றிக் கூட்டம். சந்தையில் 2 சதவீதம்தான் தமிழர்களின் கடை. மற்றவை சிங்களவர்களின் கடைகளுக்குத்தான் சிங்கள அரசு அனுமதி அளித்திருந்தது. வணிகத்தில் தமிழர்கள் இலாபம் சம்பாதித்து பொருளாதாரத்தில் வலிமையாகிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்ததை கவனிக்க முடிந்தது.

மறுநாள் அதிகாலையே தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வந்திருந்த யாவரும் தத்தமது காலைக் கடன்களை முடித்துவிட்டு அந்தோணியாரைத் தரிசிக்கத் தயாரானார்கள். சிலர் சந்தைகளில் சிங்களப் பொருட்களை வாங்கவும் வேடிக்கை பார்க்கவும் தயாரானார்கள். காலை 10 மணியளவில் இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவரும் இலங்கை கப்பல்படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டுச் சிறப்புச் செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மறை மாவட்டப் பேராயர் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இந்திய - இலங்கை மக்களுக்கான கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அமைதி திரும்ப வேண்டுமெனவும், ஈழ மக்களின் அபிலாசைகள் நிறைவேற வேண்டுமெனவும், காணாமல் போனவர்கள் திரும்ப வரவேண்டுமெனவும் எல்லாம் வல்ல தேவாலயத்தில் ஜெபித்தனர். அவரது ஜெபம் விண்ணிலும் கேட்கப்படட்டும் என நாமும் ஜெபித்தோம்.

வரிசை வரிசையாக படகுகள் தயாராய் நின்றன. அவரவர் வந்த படகுகளில் ஏறி ஊர் திரும்பினோம். திரும்பும்போது இந்தியக் கப்பல் ஒன்றில் இந்திய தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. பார்க்கும்போதே அந்தக் கொடியின் மீது நமக்கு மரியாதை ஏற்படுவதற்குப் பதிலாக அருவறுப்புத்தான் ஏற்பட்டது. இந்தக் கொடியைத் தூக்கிக்கொண்டு யாரைப் பாதுகாக்க கடல் பரப்பில் அலைகிறார்கள் என்கிற கேள்வியே கடல் அலைபோல் அடித்துக்கொண்டே இருந்தது.

இராமேசுவரத்தில் இறங்கியபோதும் அங்கே உட்கார்ந்திருந்த இந்திய அதிகாரிகளைப் பார்த்ததும் கோப உணர்ச்சியே மேலெழுந்தது. கடலில் மீன்பிடிக்கப் போகும் மீனவர் சொந்தங்களைக் காப்பாற்றத் துப்பில்லாத இவர்களுக்கு என்ன மரியாதை? என்ன வல்லரசு நாடு இது? இவர்களுக்கு ஒரு கொடி தேவைதானா? என்கிற கேள்விகள் நம்மைத் துளைத்துக்கொண்டே இருந்தன. இந்த இலட்சணத்தில் இந்திய - இலங்கைப் படகுப் பயணம் என்கிற அறிவிப்பு வேறு. 

 சொந்த நாட்டுத் தமிழர்களைக் காவுகொடுத்தேனும் இந்தியா தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தயாராகிவிட்டது.

வன்னி அரசு.

கச்சத் தீவு பயணத்தின் புகைப்படத் தொகுப்பு:









































































22 February 2015

இன்னுமாடா இந்த ஒலகம் ஒங்கள நம்புது?

அண்டப்புளுகனும் ஆகாசப்புளுகனும் தனித்தனியாக புளுகினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது, அந்த பேட்டி. அதுவும் அப்பனும் புள்ளையுமே அந்த புளுகர்களாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மக்களை ஏமாளிகளாக்கி விடுவார்கள். அப்படித்தான் அண்டப்புளுகன் ராமதாசின் நேர்காணல் புதிய தலைமுறையிலும் ஆகாசப்புளுகன் அன்புமணியின் நேர்காணல் தந்தி தொலைக்காட்சியிலும் சனிக்கிழமை(21.2.2015) இரவு ஒளிபரப்பாகியது. இரு புளுகர்களையும் அவரவர் வீடுகளில் பேட்டி கண்டார்கள் நெறியாளர்கள்.



புதியதலைமுறையில் நேர்காணல் கண்ட திரு.குணசேகரன் அவர்களுக்கு ராமதாசைப் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால், ஆரம்பத்திலேயே நன்றாக புளுக அனுமதித்தார். அண்டப்புளுகனும் அள்ளி விட்டுக்கொண்டே இருந்தார். இறுதியாக, "முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் வரைக்கும் தான், தேர்தலில் வந்ததும் மாறிடுவீங்கன்னு மக்கள் பேசிக் கொள்கின்றனர்" என்று கேள்வி கேட்டதும், முகத்தை சுழித்த அண்டப்புளுகன், "இது எங்களை இழிவுபடுத்துகிற கேள்வி, இப்படியெல்லாம் தெரிந்திருந்தால் பேட்டிக்கே ஒத்திருக்க மாட்டேன்" என்று பிகு செய்தார். இறுதியாக ஒரு கேள்வி என்று திரு.குணா கேட்ட போது கூட, எதுவுமே இல்லை என்று கடுகடுப்பாக முடித்து விட்டார்.

வெகு மக்களின், பல கட்சிகளின் சந்தேகமல்ல, உறுதியாக நம்பப்பட்டதையும் கடந்த கால புளுகுகளையும் மனதில் வைத்து தான் திரு.குணா கேள்வியாக ஆதங்கமாக கேட்டார். இதற்கு கூட அந்த அண்டபுளுகனால் பதில் சொல்ல முடியவில்லை. இதில் கோபம் வேறு.

தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது. தேசிய கட்சிகளோடும் திராவிடக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று ஊர் ஊராய் புளுகி விட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலே தேசியக்கட்சியான பாஜகவுடனும், திராவிடக்கட்சியான மதிமுகவுடனும் கூட்டணி வைத்தார். அதற்கு முன்பு வரை சாதிவெறி அமைப்புகளை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக படங்காட்டி விட்டுத்தான் பாஜகவுடன் பேரம் பேசினார். இது ஊர் உலகத்திற்கு தெரிந்த கதைதான். கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல், இப்படி தெரிந்தால், பேட்டிக்கே வந்திருக்க மாட்டேன் என்று சொல்வது தான் பதிலா? பாவம் இதற்கு எந்த பொய்யும் கிடைக்காததால் கோபத்தை மட்டும் வெளிப்படுத்தினார்.

அடுத்து நம்ம ஆகாசப்புளுகன். அப்பன் 8 அடி பாய்ந்தால் புள்ளை 16 அடி பாய்வார்கள் என்று கிராமப்புற பழமொழி உண்டு. அதைப்போல, அண்டப்புளுகனை மிஞ்சுகிற ஆகாசப்புளுகனாக அன்புமணி, தந்தி தொலைக்காட்சியில் அள்ளி விட்டார். நேர்காணல் கண்ட திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் எந்த கேள்வியையும் முடிக்கும் முன்பே முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு பதில் என்கிற பெயரில் புளுகிக்கொண்டு இருந்தார். "இதற்கு முன்பு தலித் ஒருவரைத்தான் முதலவராக்குவதாக நீங்கள்" என்று கேள்வியை முடிக்கும் முன்பே, "அதெல்லாம் பழசுங்க. இப்ப என்னன்னு பேசுங்க. ஓட்டை ரிக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லாதீங்கன்னு கோபத்துடன் சொல்லிவிட்டு, தலித் எழில்மலைக்கு மத்திய அமைச்சரு, பொதுச்செயலாளர் ஒரு தலித் என்று ரொம்ப காலத்து ஓட்டை ரிக்கார்டை ஓடவிட்டார். 



"தமிழகம் முழுக்க 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியுமா?" என்று அடுத்த கேள்வியை முடிக்கும் முன்னரே, "ஏன் முடியாது? ஏற்கனவே 234 தொகுதிகளிலும் நின்றுருக்கிறோம்" என்று ஆகாசப்புளுகை அள்ளி விட்டார். "உங்கள் தலைமையை ஏற்று மற்ற கட்சிகள் வரலாம் என்று சொல்லியிருக்கிரீர்கள். எந்த கட்சி வரும் என்று எதிர்பார்க்கிரீங்க? விஜயகாந்த், வைகோ உங்கள் தலைமையை ஏற்பார்களா? என்று திரு.பாண்டே கேட்டதற்கு, "வருவார்கள். அரசியலில் எதுவுமே நடக்கும்" என்று ஜோதிடத்தை நம்புவது போல எந்த வெட்கமும் கூச்சமும இல்லாமல் சொன்னது தான் காமெடியிலும் காமெடி. அதாவது, சந்தானம், சூரி போன்ற காமெடியர்களுக்கு துணை பாத்திரமாக விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களை அழைப்பது போல தான் இந்த ஆகாசப்புளுகனின் ஆசை இருக்கிறது.

"உங்கள் வாக்கு வங்கி என்ன? உங்கள் பலம் தெரிந்துதான் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார்களா?" என்று அடுத்தடுத்த எந்த கேள்விகளுக்குமே, "அரசியலில் எதுவும் நடக்குமுங்க, மக்கள் நம்புறாங்க மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்" என்று சீரியசாக காமெடி செய்தார். பெரும்பாலும் நான் இரவில் ஆதித்யா, சிரிப்பொலி தொலைக்காட்சிகளைத்தான் பார்ப்பது பழக்கம். ஆனால், அதையெல்லாம் மிஞ்சக்கூடியதாக ஜாலியாக இருந்தது ஆகாசப்புளுகனின் பொய்யுரை.

இடையிடையே நாங்க ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீங்கன்னு தயவு செய்து கேளுங்க.. கேளுங்க என்று அடுத்த பெரிய புளுகுகளை புளுகுவதறகு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்தார் ஆகாசப்புளுகன். ஆனால், திரு.பாண்டே அவர்களின் வழக்கம் போலான சாதுரியத்தால், "தேர்தல் நேரத்தில், தேர்தல் அறிக்கையை முன்வைத்து அப்போது கேட்கலாம்" என்று மக்களை காப்பாற்றினார். அப்படியும் விடாமல், "நாங்க ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம், மிஸ்டு கால் கொடுக்க வைப்போம் (ஏதோ புதிய கண்டுபிடிப்பு மாதிரி) கள்ளச்சாராயம் இருக்காது, அது இருக்காது, இது இருக்காது என்று பள்ளிக்கூடத்தில்" நான் முதலைமைச்சர் ஆனால்.." என்கிற தலைப்பில் மாணவர்கள் ஒப்புவிப்பது போல ஒப்புவித்துக்கொண்டிருந்தார். திரு.பாண்டே எவ்வளவோ முயன்று மற்ற கேள்விகளுக்கு நகரந்தாலும் பாவம் அவரால் முடியவில்லை. வேறு வழி இல்லாமல் ஆகாசப்புளுகனுக்கு முதல்வராக வாழ்த்துச்சொல்லி புளுகை முடித்து வைத்தார்.

பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுத்த பிறகு, எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் புளுகிக்கொண்டே இருக்கலாம். அந்த கோயபல்சு கூட வெட்கப்படுமளவுக்கு பொய்யுரைக்கலாம். அதுவும் சொந்த வன்னிய மக்களை ஏமாற்றி மற்ற கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காகத்தான் இந்த 'முதல்வர் வேட்பாளர்' காமெடி நாடகம் என்பதை அப்பாவி வன்னிய மக்களே புரிந்து கொண்டிருக்கும் போது, மற்றவர்களுக்கு புரியாதா என்ன? 

டே...இன்னுமாடா இந்த ஒலகம் ஒங்கள நம்புது?

-வன்னி அரசு.

19 February 2015

லிங்கா படப் பிரச்சனை - விடுதலைச் சிறுத்தைகள் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!

பால் வியாபாரம் பார்த்தாலும் சரி; துணி வியாபாரம் பார்த்தாலும் சரி... ஒரே பாடல் காட்சியில் பெரும் பணக்காரன் ஆகிவிடுவார் கதாநாயகன்.  பாடல் முடிந்தவுடனேயே காரிலிருந்து இறங்குவார். 
 
அப்படித்தான் சினிமா வியாபாரமும்.  கோடிகளைக் குவிக்க ஆசைப்பட்டுக் கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களாக, விநியோகஸ்தர்களாக, கதாநாயகர்களாக ஆயிரக் கணக்கில் திரிகிறார்கள்.  வெற்றி பெறுகிறார்கள் சிலர்.  கோவணமாவது மிஞ்சியதே என்று ஊரைத் தேடி ஓட்டம் பிடிக்கிறார்கள் பலர்.
  
சினிமா சூது நிறைந்த உலகம்.  பெயரில்தான் தர்மனாக இருப்பார்கள்.  பெண்டாட்டி, பிள்ளைகளை விற்று சினிமா எடுக்கும் தர்மன்களாக மாறியிருக்கிறார்கள்.  இலாப-நட்டம் எந்தத் தொழிலிலும் உண்டு. சினிமாத் தொழிலில் மட்டும் புகழும் சேர்த்து உண்டு.  அப்படித்தான் இலாப நோக்கத்தோடு அண்மையில் 'லிங்கா' திரைப்படத்தை வாங்கிய வியாபாரிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

நடிகர் ரஜினிகாந்த் என்ற ஒற்றைப் பிம்பத்தை வைத்து, வியாபாரம் செய்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாட்களில் சென்னை போன்ற பெரு நகரங்களின் சாலைகள் ஸ்தம்பித்துப் போகும். ரசிகர்களின் பணம் சாலைகளில் பட்டாசாக வெடித்துச் சிதறும்.  அந்த அளவுக்கு ஒரு 'ஓபனிங்' உண்டு. அதற்காகத்தான் பல கோடி ரூபாயைக் குதிரைப் பந்தயத்தில் கொட்டுவதுபோல் கொட்டுகிறார்கள்.  

இப்படிக் கொட்டுகிற சில படங்கள் 'ஓஹோ'வென ஓடுகின்றன.  ஏராளமான படங்கள் வந்த வேகத்திலேயே திரும்பி விடுகின்றன. 
 
இப்படி கமலின் எத்தனையோ படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன.  'ஆளவந்தான்', 'ஹேராம்' போன்றவை வியாபார அளவில் தோல்விப் படங்கள்தான். தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்திய படங்கள்தான்.  அதைப் போல முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்கள் பல தோல்வியைச் சந்தித்துள்ளன.  இந்தப் படங்களை வாங்கிய விநியோகஸ்தர் எவரும் சம்மந்தப்பட்ட நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்டதில்லை.  அடுத்தடுத்த படங்களை வாங்கி நட்டத்தைச் சரி செய்துகொண்டார்கள்.  இதுதான் திரையுலக மரபு.  இத்தகைய சுமூகமான உறவை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் பரஸ்பரம் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

  

ஆனால் இப்போது, 'லிங்கா' படத்தின் விநியோகஸ்தர்கள் திரு. ரஜினி அவர்களிடம் நஷ்ட ஈடு கேட்பது நியாயம்தானா?  நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மீதும் அவரது படங்கள் மீதும் நமக்கு பல விமர்சனங்கள் உண்டு.  அது வேறு.  ஆனால், புகழ்பெற்ற ஒரு கலைஞரை முன்வைத்து, 'பிளாக்மெயில்' செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
  
திரு. ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தொழில்முறைக் கலைஞர். சம்பளம் வாங்கினார்; நடித்துக் கொடுத்தார். அவ்வளவுதான் அவரது 'ரோல்'.  இயக்குநரும் அப்படித்தான்.  இதில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும்தான் இலாப வேட்டையாடத் துடிப்பவர்கள்.  இந்தக் குதிரைப் பந்தயத்தில் அடித்தால் ஜாக்பாட்.  இல்லையென்றால் தெருவிற்கு வரவேண்டியதுதான்.  இப்படி எத்தனையோ தயாரிப்பாளர்கள் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். வாரத்திற்கு பத்து திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதில் ஓரிரு படங்கள் மட்டுமே தப்பித்துக்கொள்கின்றன.  மற்ற படங்கள் எல்லாம் ஒரு காட்சிகூட ஓடுவதில்லை.  முன்பெல்லாம் தொழில் முறை வியாபாரிகளாக இருந்து சினிமாவை தொழிலாகப் பார்த்து நட்டம் ஏற்பட்டாலும் பொறுமையோடு காத்திருந்து வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல.  கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமாவைக் கைப்பற்றிவிட்டன. அது மட்டுமல்லாமல் 'ரியல் எஸ்டேட்', சட்டத்திற்குப் புறம்பான 'நம்பர் 2' பிஸினஸ் மூலம் சம்பாதித்து சினிமாவுக்குள் வருபவர்கள்தான் இப்போது அதிகம்.  அப்படி தொழில்முறை விநியோகஸ்தர்களாக இல்லாதவர்களாகச் சேர்ந்து 'லிங்கா' படத்தை கொள்ளை இலாபம் கிடைக்கும் என்ற பேராசையில் வாங்கினார்கள்.  அவர்களின் முதல் வியாபாரமே நட்டத்தில் முடிந்துவிட்டது.

ஒரு தொழிலில் இலாபம்-நட்டம் வருவது சகஜம்தான்.  சினிமா என்பது இப்போது தொழிலாக இல்லாமல் சூதாட்டமாக மாறிவிட்டது. இந்தச் சூதாட்டத்தில் அரசியல்வாதிகளை இழுப்பது அநாகரிகம். அதைவிட அநாகரிகம் நடித்த நடிகர்களிடம் நட்டஈடு கேட்பது.  லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை நட்டம் அடைந்ததாகச் சொல்லப்படும் விநியோகஸ்தர்கள் யாருமே தொழில்முறை விநியோகஸ்தர்கள் அல்ல.  அதுதான் இங்கு பிரச்சனை.  

உண்மையிலேயே நட்டஈட்டை வேந்தர் மூவிஸிடம்தான் இவர்கள் கேட்க வேண்டும். அதைவிடுத்து திரு. ரஜினி அவர்களிடம் கேட்பது தவறானது.  லிங்கா படத்தின் மூலம் இலாபம் அடைந்திருந்தால் அதிக இலாபம் அடைந்துவிட்டோம் என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு எந்த விநியோகஸ்தராவது இலாபத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்களா?  அல்லது இலாபம் அடைந்தோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா?  லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் நட்டம் அடைந்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரதம், பிச்சையெடுக்கும் போராட்டம் என்று மிரட்டுவது தொழிலுக்கே எதிரானது. இதில் அரசியல்வாதிகளை இழுப்பது ஆபத்தானது.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அடுத்தடுத்த படங்களை வாங்கித்தான் நட்டத்தைச் சரி செய்ய வேண்டுமே தவிர, மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது சரியல்ல.  அதாவது பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாக இருப்பதாக, தவறாக ஒரு சிலர் கட்சியின் பெயரை திரையுலகில் பயன்படுத்தி வருவதாகக் கேள்விப்படுகிறோம்.  அப்படிப் பயன்படுத்தினால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.  

கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு நடிகர் ரஜினி அவர்களுக்கு எதிராக விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, விநியோகஸ்தர்கள் சார்பாக ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, "எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்துவதற்காக சீமான் வருகிறார், தலைவர் திருமாவளவன் அவர்களும் வரவேண்டும்.  அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார்.  அதற்கு நான், "இது உங்கள் திரையுலகப் பிரச்சனை.  படத்தில் நட்டம் ஏற்பட்டதற்காக நடிகரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்பது முறையானதுமல்ல. எனவே நாங்கள் இதில் தலையிட மாட்டோம்" என்று சொன்னதும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆகவே, லிங்கா திரைப்படப் பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அது கண்டனத்துக்குரியது.  அப்படிப் பயன்படுத்துவது தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். 
 
விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை எந்தத் தளத்திலும் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!

வன்னி அரசு.

31 January 2015

ஈழத்தமிழர் சிக்கல்: புதிய இரு வல்லவர்களும் பழைய அலாவுதீன் விளக்கும்

இலங்கையின் புதிய இரு வல்லவர்களுக்கு பழைய அலாவுதீன் விளக்கு ஒன்று கிடைத்துவிட்டது. பங்காளிகள் எல்லாம் வேண்டாம் என்று பழைய குப்பை கூளங்களுடன் பரணியில் தூக்கிவீசப்பட்ட அந்த அலாவுதீன் விளக்கை மீண்டும் தூசிதட்டித் துடைத்து எடுத்துவிட்டார்கள். அந்த விளக்கு மிகவும் சக்தி வாய்ந்ததென்றும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை பொருந்தியதென்றும் உலகின் சகல ஜனங்களுக்கும் அறிவிப்புச் செய்துவிட்டார்கள். அந்த விளக்கு இலங்கைத் தீவுக்கே வெளிச்சம் கொடுக்கப் போகிறதாம். அதைத் தடவித் தடவிப் பார்த்தாலே போதும் பாலும் தேனும் கிடைக்குமாம். அது எல்லோருக்குமான எல்லாவிதமான பசியையும் தீர்த்துவிடுமாம். அரை நூற்றாண்டுக்கு மேலான மக்கள் பிரச்சனைகளைக்கூட இந்த விளக்கு தீர்த்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அந்த அற்புத விளக்கின் பெயர் 13வது சட்டத் திருத்தம். இரு வல்லவர்கள் மைத்ரிபால சிறீசேனா, ரணில் விக்ரமசிங்கே.



2009ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்திய இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகத் தண்டிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க தமிழர்கள் அப்போதிருந்தே போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஐக்கிய நாடுகள் அவையில் இராஜபக்சேவைத் தண்டிக்க வாக்கெடுப்புக்கூட நடத்தினார்கள். தண்டிக்க முடியவில்லை. ஆனால் அறம் சார்ந்த தமிழர்கள் இராஜபக்சேவைத் தண்டிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம் வந்தது. நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இராஜபக்சேவை சனநாயக முறையில் தண்டித்தார்கள். வடக்கு-கிழக்கு, மலையகப் பிரதேசங்களின் கோப நெருப்பு இராஜபக்சேவை வீழ்த்தியது. இலங்கைத் தீவுக்கு யார் அதிபராக வரவேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியாய் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்தனர். இராஜபக்சே கட்சியின் பொதுச்செயலாளரான மைத்ரிபால அதிபரானார். ஏற்கனவே குள்ளநரியாக இருந்த ரணில் விக்ரமசிங்கே 13வது சட்டத்தைக் காட்டி இப்போது நல்ல நரியாக ஊளையிடுகிறார். இலங்கையின் இனப்பிரச்சனைகள் அத்தனைக்கும் சர்வரோக நிவாரணி 13வது சட்டத் திருத்தம்தான் என்று மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இலங்கையின் உச்ச நீதிமன்றமே 13வது சட்டத்திருத்தம் செல்லாது என்று தீர்ப்புக் கூறிய பிறகும் இலங்கையின் புதிய வல்லவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் போவதாக ஏமாற்றுகிறார்கள்.

சரி இந்த 13வது சட்டத்திருத்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

தனித்தமிழ் ஈழத்தில்தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக தனித்த இறையாண்மையோடு வாழ முடியும் என்கிற உறுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத் தந்தை செல்வா போராடினார். ஆனாலும், சிங்கள, பௌத்தப் பேரினவாதம் ஈழத் தந்தை செல்வா அவர்களின் அறப்போராட்டத்தை அரச பயங்கரவாதம்கொண்டு ஒடுக்கியது. அழுத்த அழுத்த வெடிகுண்டுகள் வெடித்தன. புலிகள் முளைத்தனர். புலிகளின் ஆயுதவழிப் போராட்டத்தை நசுக்க சிங்களப் பேரினவாதம் கடும் முயற்சியில் ஈடுபட்டது. புலிகளின் வலிமையை, உறுதியை சிங்களவர்கள் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், 1987 சூலை 5ஆம் நாள் நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலால் சிங்களப் பேரினவாதம் நிலைகுலைந்தது. சிங்களம் மட்டுமல்ல உலகமே அதிர்ந்தது. புலிகளைச் சமாளிக்க முடியாமல் இந்தியாவின் உதவியை நயவஞ்சகமாக நாடினார் அன்றைய அதிபர் ஜெயவர்த்தனே. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேயின் வஞ்சகத்தை அறியாமல் சிங்கள வலையில் வீழ்ந்தார். சூலை 29, 1987அன்று இந்திய-இலங்கை உடன்பாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பமிட்டனர். தமிழர்களின் சார்பில் கையெழுத்திட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியா மிரட்டியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லையென்று பிரபாகரன் மறுத்துவிட்டார். தமிழர்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாமலேயே உடன்படிக்கை கையொப்பமானது. இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை தமிழ்ப் பெண்களை வேட்டையாடியது. தமிழர் உடைமைகளைச் சூறையாடியது. தமிழர்களைக் கொன்றுகுவிப்பதன் மூலம் புலிகளை அடிபணிய வைக்க முயன்றது. கூடுதலாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் குறிவைத்து கொலை செய்ய 'செக் மேட்' எனும் நடவடிக்கையிலும் இறங்கியது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டுக் குழுக்களுக்கு இந்திய இராணுவமே ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகக் களமிறக்கியது. இந்த அணுகுமுறை இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கே எதிரானதாகும். அதாவது, போராளிக் குழுக்கள் அனைவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சனநாயகப் பாதைக்கு வரவேண்டும் என்பதுதான் இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம். ஆனால் புலிகளை மட்டும் அழிப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தமாக அது மாறிப்போனது. ஆனாலும் புலிகள் நெஞ்சுரத்தோடு இந்திய இராணுவத்தை எதிர்கொண்டார்கள். இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தைக் கண்டித்துத் தமிழகம் கொதித்தது. இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்னும் போராட்டம் வலுத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வி.பி.சிங் இந்தியப் பிரதமரானார். அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டது.




இந்திய-இலங்கை உடன்படிக்கை சனநாயகத்தின் முன் கிழித்தெறியப்பட்டது. விடுதலைப் புலிகள் இந்த உடன்பாடு குறித்து கடந்த சூலை 9, 1988 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 9 மாதங்களாக இந்திய இராணுவத்தினரால் எங்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் அநீதியான இராணுவ நடவடிக்கையினால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் பாலிய வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். பல இலட்சம் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வனவிலங்குகளும் காடுகளும் அழிக்கப்பட்டன. 

 கடந்த 40 ஆண்டுகளாக இனப்படுகொலையொத்த அடக்குமுறையைச் சந்தித்துவரும் தமிழ் மக்களுக்கு பல கோடி ரூபாய் செலவழித்து தமிழர் பகுதிகளில் குண்டுகளைப் பொழிந்து இந்தியா சனநாயகத்தை சொல்லித்தர முயற்சிக்கிறது. இந்தியாவின் பிரச்சாரம் என்பது வடக்கு-கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக ஒன்றிணைத்து அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் தமிழர்களின் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்கள். இங்கே அளப்பரிய தியாகம் செய்த தமிழ் மக்களும், வீரச்சாவடைந்த மாவீரர்களின் அர்ப்பணிப்பும் அதிகாரமே இல்லாத மாகாண சபைத் தேர்தலுக்கோ மாகாணங்களின் தற்காலிக இணைப்புக்கோ அல்ல என்பதை நினைவுகூரவேண்டும். இங்கே வடக்கும் கிழக்கும் என்று சொல்லப்படுவது தமிழர்களின் தாயகம். அது பிரிவினைக்கு அப்பாற்பட்டது.

வடமராச்சியில் இலங்கை இராணுவ நடவடிக்கையையடுத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டோம் என்று இலங்கை இராணுவம் கொக்கரித்தது. அதே வேளையில் 1987 சூலை 5 நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலையடுத்து சிங்களர்களும் ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறவில்லை என்பதையும், விடுதலைப் புலிகள் ஒடுக்கப்படவில்லை என்பதையும் உணர்ந்துகொண்டனர். தமிழர்களைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு இலங்கைக்குள் நுழைந்த இந்தியா, சிங்களர்களைவிட மோசமான கொடுமைகளைப் புரிந்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகவும், கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கிறது. துரோகிகளின் உதவியிலாவது தேர்தலை நடத்த முடியுமா என்று வாய்ப்புகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. 

 இந்திய இராணுவத்தின் முகாமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் போலியான தேர்தலை நடத்தி பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் தமிழீழத்தில் சனநாயகம் திரும்பிவிட்டது என்று உலகை நம்ப வைக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. ஏனென்றால், தமிழர்களுக்கு ஞாயமான பாதுகாப்பை வழங்காத எந்தவொரு தீர்வையும் சமாதானம் என்கிற போர்வையில் புலிகள் ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்தியா புலிகளை அழிக்கவும் அதன் தலைவர்களை ஒழித்துக்கட்டவும் பெரும் முயற்சி எடுத்துவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் அழிப்பதன் மூலம் இந்திய-இலங்கை உடன்பாடு என்னும் தமிழர்களின் அடிமை சாசனத்தை அமல்படுத்த முடியும் என்று இந்தியா நம்புமானால் அது தவறாகும். 

தொடர்ந்து இந்தியா புலிகளை அழிப்பதிலும் தமிழர்களைக் கொல்வதிலும் ஈடுபடுமானால் அர்த்தமற்ற இந்த அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கி அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக தமிழ்த் தேசத்தை நீண்டதொரு போராட்டத்திற்குத் தயார்படுத்த புலிகள் தள்ளப்படுவார்கள்.

- இப்படி தொலைநோக்குப் பார்வையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்ததன்பேரில், அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக, தமிழீழ விடுதலைக்காகப் போராடி இலட்சக் கணக்கான மக்களும் ஆயிரக்கணக்கான போராளிகளும் மாண்டு மடிந்திருக்கிறார்கள். இந்தச் சோகத்தின் நெருக்கடியில்தான் 13வது சட்டத் திருத்தத்தை ரணில் விக்ரமசிங்கே நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 

இந்திய அமைதிப் படையின் டாங்கியை வீழ்த்திய பெண் புலிகள்

1988ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இந்தியாவே நடத்திய போலித் தேர்தலில் மாகாண முதல்வராக அமர்த்தப்பட்ட வரதராஜபெருமாள், 1990இல் இந்த சட்டத் திருத்தத்தால் தமிழர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். இந்திய இராணுவமும் இந்தியாவுக்குத் திரும்பும்போது வரதராஜபெருமாளை பாதுகாப்பாக கப்பலில் அழைத்துவந்து இறக்கிவிட்டது.

இப்படி, இந்தியாவின் எடுபிடியாக, பொம்மை முதல்வராக இருந்த வரதராஜபெருமாளே, இந்தச் சட்டத் திருத்தத்தால் எந்தவிதப் பயனும் இல்லை என்று சொன்ன பிறகும், இச்சட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்த இலங்கை அரசு துடிப்பதற்குக் காரணமென்ன?

முள்ளிவாய்க்கால் போருக்கு பின் சிங்கள அரசின் வெ(ற்)றிக் கொண்டாட்டத்தில் இராஜபக்சேவும் சிறீசேனாவும் 

வரும் மார்ச் 25ஆம் தேதி ஐ.நா. அவையின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. அதற்குள்ளாக தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் என்ற பேரில் எதையாவது கொடுத்து இனப்பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று அறிவிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அது மட்டுமல்லாமல் மார்ச் 25க்குப் பிறகு ஐ.நா. குழு இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்கத் தொடங்கினால் இராஜபக்சே மட்டுமல்ல அன்றைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா, மைத்ரிபாலசிறீசேனா (புலிகளின் மீதான போருக்கு ஒப்பமளித்த அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர்) போன்றோரும் குற்ற விசாரணையில் சிக்கிக்கொள்ள நேரிடும். இவற்றையெல்லாம் தடுப்பதற்காகவும், ஏமாற்றவும்தான் 13வது சட்டத் திருத்தத்தைத் தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை இலங்கையில் மீள்குடியமர்த்தும் பணியில் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 30-1-2015 அன்று புதுதில்லியில் அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அக்கூட்டம் கூட்டப்படக்கூடாது என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிப்பதான, வரவேற்கத் தகுந்த எதிர்ப்பாகும். ஐ.நா. மனித உரிமை அவை கூடுவதற்கு முன்பு இந்தியாவில் உள்ள அகதிகள் இலங்கையில் குடியமர்த்தப்பட்டுவிட்டதாக உலகை நம்ப வைக்கத்தான் இத்தகைய முயற்சிகள் நடக்கின்றன. போர் முடிந்து இராஜபக்சே வீழ்த்தப்பட்ட பிறகு தமிழர்கள் அங்கே போவதுதானே ஞாயம்? என்றுகூடச் சிலர் கருத்து வைக்கிறார்கள்.

13வது சட்டத் திருத்தத்தின்படி முதலில் தமிழர்கள் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்தி, தமிழர் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். உயர் பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ள தமிழர் தாயகத்தின் நெருக்கடியைத் தளர்த்த வேண்டும். இவற்றை முன்னோட்டமாக புதிய மைத்ரிபால அரசு செய்யாமல் வேறு எதைச் செய்தாலும் உலகை ஏமாற்றத்தான் அது என்பது நிரூபணமாகும்.

இலங்கையை சர்வதேச நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இந்தியா இப்போதே அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டது.

ஆனால் தமிழர்களாகிய நாம்...?

வன்னிஅரசு.